RSS On Manipur: மணிப்பூரில் அமைதி திரும்ப உடனடி நடவடிக்கை வேண்டும் என, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.


பற்றி எரியும் மணிப்பூர் - மோகன் பகவத்:


நாக்பூர் ரேஷிம்பாக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோகன் பகவத் உரையாற்றினார். அப்போது, தேர்தல் பேச்சு வார்த்தைகளுக்கு அப்பால் சென்று தேசிய பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். மணிப்பூரில் தொடரும் வன்முறைகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதோடு,  கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க உடனடி மற்றும் முன்னுரிமை அளிக்கப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.


அமைதிக்காக காத்திருக்கும் மணிப்பூர் - மோகன் பகவத்:


மோகன் பகவத் பேசுகையில், “மணிப்பூர் கடந்த ஒரு வருடமாக அமைதிக்காக காத்திருக்கிறது. மணிப்பூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைதி நிலவியது, துப்பாக்கி கலாச்சாரம் அங்கு முடிவுக்கு வந்தது போல் உணர்ந்தேன். ஆனால் மாநிலத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் உள்ள சூழ்நிலையை முன்னுரிமையுடன் பரிசீலிக்க வேண்டும். தேர்தல் சொற்பொழிவுகளைக் கடந்து தேசம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.  தூண்டப்பட்ட அமைதியின்மையால் மணிப்பூர் எரிகிறது மற்றும் மக்கள் அதன் தீவிர வெப்பத்தை எதிர்கொள்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.


தேர்தல் பற்றிய விவாதங்கள் வேண்டாம் - மோகன் பகவத்:


தேர்தல் முடிவு பற்றி பேசுகையில், “தேர்தல் முடிவுகள் குறித்த தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். பொது நலனுக்காக செயல்படுவதை உறுதி செய்வதற்காக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். வாக்கெடுப்புகள் பெரும்பான்மையைப் பெற வேண்டும், இது ஒரு போட்டியே தவிர போர் அல்ல. அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒருவரையொருவர் மோசமாகப் பேசுவது சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தக்கூடும் என்பதை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. தேர்தலில் எப்போதும் இரண்டு பக்கங்கள் இருக்கும், ஆனால் வெற்றி பெற பொய்களை நாடாமல் இருப்பதோடு,  கண்ணியத்துடன் இருக்க வேண்டும்” என மோகன் பகவத் வலியுறுத்தினார்.


பிற மதங்களின் நன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் - மோகன் பகவத்:


சமூகங்கள் தொடர்பாக பேசுகையில், “இந்திய சமூகம் வேறுபட்டது, ஆனால் அது ஒரே சமூகம் என்பது அனைவருக்கும் தெரியும், மேலும் அதன் பன்முகத்தன்மையை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவிற்கு வந்தபோது, அவர்களின் சித்தாந்தத்தை அவர்களுடன் கொண்டு வந்தனர். அதை ஒரு சிலர் பின்பற்றினர். ஆனால் இந்த சித்தாந்தத்தால் நாட்டின் கலாச்சாரம் பாதிக்கப்படாமல் இருப்பது நல்லது. இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் போன்ற மதங்களில் உள்ள நன்மை மற்றும் மனிதநேயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.  அனைத்து மதங்களைப் பின்பற்றுபவர்களும் ஒருவரையொருவர் சகோதர சகோதரிகளாக மதிக்க வேண்டும் . இந்த தேசம் நம்முடையது என்றும், இந்த மண்ணில் பிறந்தவர்கள் அனைவரும் நம்முடையவர்கள் என்றும் நம்பி அனைவரும் முன்னேற வேண்டும். வெளிநாட்டு சித்தாந்தங்கள் மட்டுமே உண்மை என்ற நம்பிக்கையை கைவிட வேண்டும்” எனவும் மோகன் பகவத் வலியுறுத்தினார்.