Union Cabinet And Council Of Ministers: மத்திய அமைச்சரவை மற்றும் அமைச்சர்கள் குழு ஆகியவை தனித்தனியான பாத்திரங்களையும், அமைப்புகளையும் கொண்டுள்ளன.


கேபினட் அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் குழு:


பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சர்கள் குழுவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக கடந்த ஞாயிறன்று பதவியேற்றார். அதில் 29 பேர் கேபினெட் அமைச்சர்களாகவும்,  ஐந்து பேர் சுயேச்சைப் பொறுப்பில் உள்ள மாநில அமைச்சர்களாகவும், 36 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அதன்படி, தற்போது பிரதமர் உட்பட 72 எம்.பி.க்கள் அமைச்சர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளனர்..  


'யூனியன் கேபினட்' மற்றும் 'கவுன்சில் ஆஃப் மினிஸ்டர்ஸ்' என்ற சொற்கள் பெரும்பாலும் பிரபலமான உரையாடல்களிலும், ஊடகங்களிலும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன.  இது இந்தியாவின் நிர்வாகத்தில் அவற்றின் தனித்துவமான பாத்திரங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து குறிப்பிடத்தக்க குழப்பத்திற்கு வழிவகுக்கின்றன. 


நீடிக்கும் குழப்பம்:


இந்த குழப்பமானது, உறுப்பினர்கள் இரண்டு அமைப்புகளிலும் இடம்பெற்று இருப்பது, அரசாங்க முடிவெடுப்பதில் அவற்றின் கூட்டுப் பொறுப்புகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளுக்கு இடையே தெளிவான பொது வேறுபாடு இல்லாதது உள்ளிட்ட பல காரணிகளில் வேரூன்றியுள்ளது. இரண்டு அமைப்புகளும் அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கையில் ஒருங்கிணைந்தாலும், இரண்டுமே பிரதமரால் தலைமை தாங்கப்பட்டாலும், அமைச்சர்கள் குழு என்பது பெரிய அமைப்பாகும்.  பல்வேறு நிலைகளில் உள்ள அனைத்து அமைச்சர்களையும் உள்ளடக்கியது. மேலும் மத்திய அமைச்சரவை ஒரு சிறிய, தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவாகும். இதில் மூத்த அமைச்சர்கள் மட்டுமே பங்களிப்பர்.


அமைச்சரவைக்கும் - அமைச்சரவை குழுவிற்கும் என்ன வித்தியாசம்?


இந்தியாவின் பாராளுமன்ற அமைப்பின் சூழலில், மத்திய அமைச்சரவை மற்றும் அமைச்சர்கள் குழு ஆகியவை தனித்துவமான செயல்பாடுகள் மற்றும் அமைப்புகளைக் கொண்டுள்ளன. 


அமைச்சர்கள் குழு:


அமைச்சர்கள் குழு என்பது அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களையும் உள்ளடக்கிய ஒரு பெரிய அமைப்பாகும்.  இதில் பிரதமர் முதல் பல்வேறு அமைச்சர்கள் வரை அதாவது கேபினட் அமைச்சர்கள், இணையமைச்சர்கள், சுயேச்சை பொறுப்புள்ள மாநில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற செயலாளர்கள் ஆகியோர் அடங்குவர். அமைச்சர்கள் குழு என்பது பிரதமர் தலைமையிலான அரசியலமைப்பு ஆகும். இது உள்துறை, நிதி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு போன்ற முக்கிய அமைச்சகங்களுக்குப் பொறுப்பான மூத்த அமைச்சர்களைக் கொண்ட கேபினட் அமைச்சர்கள் இடம்பெறுவர். 


நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் நடவடிக்கைக்கும்,  நிர்வாகத்திற்கும் இந்த கவுன்சில் பொறுப்பேற்கும். சபையில் அமைச்சர்கள் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படவில்லை. இருப்பினும், அரசியலமைப்பின் 91 வது திருத்தத்தின்படி, பிரதமர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் 15% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. அமைச்சர்கள் குழு கூட்டம் குறைவாகவே நடத்தப்படும். ஆனால், அமைச்சரவையின் முடிவுகளை செயல்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும்.


மத்திய அமைச்சரவை: 


மத்திய அமைச்சரவை என்பது அமைச்சர்கள் குழுவின் சிறிய, ஆனால் அதிக சக்தி வாய்ந்த துணைக்குழு ஆகும். அரசாங்கத்தின் முக்கிய முடிவெடுக்கும் இந்த அமைச்சரவையையும் பிரதமர் தான் வழிநடத்துகிறார்.  கேபினட் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் மட்டுமே இதில் அங்கம் வகிப்பர். இவர்கள் பொதுவாக உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவு, நிதி போன்ற மிக முக்கியமான அமைச்சகங்களுக்கு தலைமை தாங்கும் மூத்த அமைச்சர்கள் ஆவர்.


முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதற்கும் அன்றைய அரசாங்கத்தின் திசையை அமைப்பதற்கும் அமைச்சரவை பொறுப்பு வகிக்கிறது.  இது பல்வேறு அமைச்சகங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்கிறது மற்றும் கொள்கைகளின் ஒருங்கிணைந்த அமலாக்கத்தை உறுதி செய்கிறது. கொள்கைகள், சட்டம் மற்றும் நிர்வாகம் பற்றி விவாதிக்கவும் வடிவமைக்கவும் அமைச்சரவைக் கூட்டங்கள் தொடர்ந்து அவ்வப்போது நடத்தப்படுகின்றன.