RSS Mohan Bhagwat: வங்கதேச வன்முறையில் இருந்து இந்துக்கள் பாடம் கற்க வேண்டும் என, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.


மோகன் பகவத் பேச்சு:


ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், தனது வருடாந்திர விஜயதசமி உரையை நாக்பூரில் உள்ள அமைப்பில் தலைமை அலுவலகத்தில் நிகழ்த்தினார். அப்போது, ஒழுங்கமைக்காமல், பலவீனமாக இருப்பது தவறானவர்களின் அட்டூழியங்களை அழைப்பது போன்றது என்றார. தங்களது அமைப்பு 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது, ​​வங்கதேசத்தில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து இந்துக்கள் பாடம் எடுக்க வேண்டி உள்ளது என கூறினார். மேலும், பலவீனமானவர்களைக் கடவுள் கூட கவனிப்பதில்லை என்று ஒரு பிரபலமான பழமொழி உள்ளது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.


”இந்துக்களுக்கு பெரும் பங்கு உண்டு”


அந்த உரையில், “வங்கதேசத்தில் இந்துக்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகி சிறுபான்மையினராக குறைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பாரதிய அரசு மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்து சமூகத்தின் உதவி தேவைப்படும். பயமுறுத்துவதற்காகவோ, மிரட்டுவதற்காகவோ அல்லது சண்டையைத் தூண்டுவதற்காகவோ இதுகுறித்து நான் தற்போது பேசவில்லை. அத்தகைய சூழ்நிலை இருப்பதை நாம் அனைவரும் அனுபவித்து வருகிறோம். நாட்டை ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், வலிமையாகவும் மாற்றுவது அனைவரின் பொறுப்பு. இந்து சமுதாயத்திற்கு பெரும் பொறுப்பு உள்ளது. தங்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள இந்துக்கள் ஒற்றுமையுடன் வலிமையாக திகழ வேண்டும். வங்கதேச வன்முறையில் இருந்து இதற்கான பாடத்தை கற்க வேண்டும்.


எந்தக் காரணமும் இல்லாமல் வன்முறையை தூண்டும் சம்பவங்கள் நாட்டில் திடீரென அதிகரித்து வருகின்றன. ஆனால் அதை வெளிப்படுத்தவும் அவற்றை எதிர்க்கவும் ஜனநாயக வழிகள் உள்ளன. வன்முறையில் ஈடுபடுவது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தாக்குவது, பயத்தை உருவாக்க முயற்சிப்பது போக்கிரித்தனம்” என மோகன் பகவத் சாடியுள்ளார்.


ஒடிடி தளங்களை சாடிய மோகன் பகவத்:


ஒடிடி தளங்களில் 'வக்கிரமான காட்சி உள்ளடக்கத்தை' கட்டுப்படுத்த சட்டம் தேவை என்று மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார். மேலும், ”இதுபோன்ற அநாகரீகங்கள் நடக்காமல் தடுப்பதும், குற்றவாளிகளை உடனடியாகக் கட்டுப்படுத்தி தண்டிப்பதும் அரசாங்கத்தின் வேலை. ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை, சமூகம் தன்னையும், தன் உடைமைகளையும் அன்பானவர்களின் உயிருடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என மோகன் பகவத் எச்சரித்துள்ளார்.


”ஆர்ஜி கர் சம்பவம் ஒரு அவமானம்”


தொடர்ந்து பேசுகையில், “கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கு நடந்த சம்பவம் நம் அனைவருக்கும் ஒரு அவமானம். இதுபோன்ற சம்பவங்கள் நடக்க அனுமதிக்கக் கூடாது. அவை நடந்தால், அவற்றை நிவர்த்தி செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இருப்பினும், குற்றவாளிகளை பாதுகாக்கும் முயற்சி நடந்துள்ளது. குற்றம் மற்றும் அரசியலுக்கு இடையேயான கூட்டணியுடன், தவறு செய்பவர்களைப் பாதுகாக்கும் கலாச்சாரம் இந்த விளைவுகளுக்கு வழிவகுத்தது” என்று மோகன் பகவத் சாடியுள்ளார்.