அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில்  சசிகலாவிற்கு ஆதரவு?

Continues below advertisement


தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்பு அதிமுக கட்சியை ஒருங்கிணைத்து அதனை வழி நடத்த அதிமுகவினருக்கிடையே பல்வேறு போட்டிகள் நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தேர்தல் களத்தை சந்தித்து தற்போது எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் சசிகலா தற்போது அதிமுகவிற்கு வரவேண்டும் எனவும், அதிமுகவை வழி நடத்துவதற்கு கட்சிக்கு தலைமை ஏற்க அதிமுக கட்சி நிர்வாகிகளே சசிகலாவுடன் தொடர்பு கொண்டு பேசும் ஆடியோக்கள் பல வெளியான நிலையில்.




தற்போதுள்ள அதிமுக தலைமையானஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுடன் தொடர்பு வைத்திருந்த அதிமுக கட்சி நிர்வாகிகள் யாராகினும் அவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிருந்தனர். அதேபோல் அதிமுகவில் சசிகலாவை சேர்க்கக்கூடாது எனவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட செயலாளர்கள் மூலமாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். இந்தநிலையில் சிவகங்கை ,திருநெல்வேலி, திண்டுக்கல் ,மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சசிகலாவிற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலும் சசிகலாவிற்கு எதிரான நிறைவேற்றப்பட்டது.




இந்நிலையில் அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் தற்போது வரை சசிகலாவிற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பது கட்சி நிர்வாகிகளுக்கிடையே பல்வேறு  விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது அதிமுக தேனி மாவட்ட செயலாளராக இருந்து வரும் சையதுகானிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, ‛‛ அதிமுக கட்சிக்கும் சசிகலாவிற்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை எனவும், அவர் யாரென்று தெரியாது எனவும் கூறினார்.



யார் என்று தெரியாத ஒரு நபருக்கு நாங்கள் ஏன் தீர்மானம் அவருக்கு எதிராக நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறினார்.  இதனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்., சொந்த மாவட்டமான தேனியில் சசிகலாவிற்கு எதிராக இதுவரை தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. தேனி மாவட்ட செயலாளர் சையது கான், ஓ.பி.எஸ்.,ன் குரலாக இருப்பவர். சசிகலாவுக்கு எதிரான தீர்மானம் தேவையில்லை என அவர் கூறியிருப்பது அவரது குரலாக தெரியவில்லை, ஓபிஎஸ் ., குரலாக தான் கட்சியினர் பார்க்கின்றனர். தேர்தல் நேரத்தில், சசிகலா விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என ஓபிஎஸ் கூறியிருந்தார். ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டாம் என தான் தான் கூறியதாக சமீபத்தில் சசிகலா பேசியிருந்தார். அதுமட்டுமின்றி, ஓபிஎஸ் ஆதரவு கருத்துக்களையும் இடையே இடையே சசிகலா பூடகமாக கூறி வருகிறார். இந்த நிலையில் தான் சசிகலாவிற்கு எதிரான தீர்மான விவகாரத்தில் தேனி மாவட்ட அதிமுக வேறொரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. காரணம் வேறு கூறினாலும், அது ஏற்கும் படி இல்லை என்பதால் தான் இந்த சந்தேகம் வலுக்கிறது.