தமிழ்நாட்டின் முக்கிய கட்சியாக இருக்கக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சியில், தந்தை மற்றும் மகனுக்கு இடையே நடைபெறும் மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. இருவருக்கு இடையே இருக்கின்ற பிரச்சனை, பேச்சுவார்த்தையின் மூலம் சரிசெய்யப்படும் என எதிர்பார்த்த தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது.

பிரச்சினையின் தொடக்கம் என்ன ?

கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, 2022-ஆம் ஆண்டு அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின், தலைவராக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு அன்புமணி ராமதாசுக்கு கட்சியின் முழு அதிகாரம் கொடுக்கப்படாமல், ராமதாஸ் நிர்வாகிகளை நியமித்து வந்ததாக கூறப்படுகிறது.

பூகம்பத்தை ஏற்படுத்திய ராமதாஸ் அறிவிப்பு 

பாமகவின் மிக முக்கியமான மாநாடாக வன்னியர் சங்க மாநாடு பார்க்கப்பட்டது. அந்த மாநாட்டிற்கான வேலைகளை, அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வந்தார். அப்போது ஏப்ரல் மாதம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டேன். இனி செயல் தலைவராக அவர் தொடர்வார் என அறிவித்தார். அதன் பிறகும் அன்புமணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.

ராமதாஸ் கூட்டத்தை புறக்கணித்த மாவட்ட செயலாளர்கள் 

வன்னியர் சங்க மாநாடு நடைபெற்ற முடிந்த சில நாட்களில், தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி இருந்தார். ஆனால் 8 பேரை தவிர அனைவரும் அந்த கூட்டத்தை புறக்கணித்திருந்தனர். ஆனால் அதற்கு அடுத்தடுத்த நாளில் ராமதாஸ் கூட்டிய மகளிர் அணி, சமூக நீதிப் பேரவை, ஊடகப் பேரவை, தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட கூட்டங்களுக்கு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதன்பிறகு ராமதாஸ் மாவட்ட செயலாளர்களை நீக்கி புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க தொடங்கினார். அதற்கு அடுத்த நிமிடமே அன்புமணி ராமதாஸ் பொதுக்குழுவாள் தேர்ந்தெடுத்த தலைவருக்கு மட்டுமே, நிர்வாகிகளை நியமிக்கும் அதிகாரங்கள் உண்டு. எனவே நீங்கள் அனைவரும் பொறுப்பில் தொடருவீர்கள் என, கடிதம் கொடுக்க தொடங்கினர். 

அன்புமணியின் மீது விமர்சனங்கள் 

தொடர்ந்து ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து, அன்புமணி மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைக்க தொடங்கினார். எனது பேரை பயன்படுத்தக் கூடாது, ஓட்டு கேட்கும் கருவியை அன்புமணி வைத்தார், அன்புமணி வாயை திறந்தாலே பொய் கூறுவார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன்வைத்தது, பாமகவினர் மத்தியில் அன்புமணியின் மீது இயல்பாகவே ஆதரவை அதிகரிக்க தொடங்கியது. 

இந்தநிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி முடித்து இருக்கின்றனர். இரண்டு தரப்பும் தங்களை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கின்றன.‌ தீர்மானங்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.‌ இதன் மூலம் பாமக இரண்டாக உடைந்து இருப்பதாகவே அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒழுங்கு நடவடிக்கை குழு

ராமதாஸ் கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாமகவின் ராமதாஸ் தரப்பு ஒழுங்கு நடவடிக்கை குழு, அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது. அன்புமணி ராமதாஸ் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை, இதனைத் தொடர்ந்து திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழு கூடுகிறது. 

ராமதாஸ் திட்டம் என்ன? 

இதுகுறித்து ஒரு சில நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு பேசினோம்: அன்புமணி மீது ராமதாஸ் கடும் கோபத்தில் இருந்து வருகிறார். சமீபத்தில் சமூக வலைதளங்களில் ராமதாஸின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தநிலையில் இந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. அன்புமணி ராமதாஸுக்கு மேலும் பதில் அளிக்க நேரம் இந்த ஒழுங்கு நடவடிக்கை குழு கொடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே செயல் தலைவர் பதவியை அன்புமணி ஏற்காமல் இருக்கும் நிலையில், செயல் தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க ராமதாஸ் முடிவு செய்து இருப்பதாக தெரிவித்தனர்.