பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்களிடையே உரையாற்றிய அவர், திமுக அரசின் மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Continues below advertisement

திருவண்ணாமலை மாவட்டம் பிரிப்பது குறித்து

அமைச்சர் எ.வ. வேலுவின் அதிகாரம் குறைந்துவிடும் என்பதால், திருவண்ணாமலை மாவட்டத்தை நிர்வாக ரீதியாகப் பிரிக்க அவர் அனுமதிக்கவில்லை என அன்புமணி குற்றம் சாட்டினார். மிகப்பெரிய மாவட்டமான திருவண்ணாமலையை பிரிப்பதன் மூலமே அதன் வளர்ச்சி உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில், வாக்காளர்களை ஏமாற்ற பணமூட்டைகளுடன் வரும் எ.வ. வேலுவையும், அவரது மகனையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக்கொண்டார்.

வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர்கள்:

திமுக தனது தேர்தல் வாக்குறுதியான "தனியார் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்பு உள்ளூர் இளைஞர்களுக்கு" என்பதை நிறைவேற்றவில்லை என அன்புமணி சாடினார். இந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தால், 1.30 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று, போதை பழக்கத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Continues below advertisement

முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் செல்வது சுற்றுப்பயணம் அல்ல, அது வெறும் சுற்றுலா என்றும், திமுக அரசு கொண்டு வந்த முதலீடுகளில் 10% மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்றும் அன்புமணி கூறினார். இதுகுறித்த விவரங்களை விரைவில் புத்தகமாக வெளியிடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகள் மீது குண்டர் சட்டம்:

"ஹிட்லர் கூட செய்யாத கொடூரத்தை விவசாயிகளுக்கு திமுக அரசு செய்துள்ளது," என்று அன்புமணி ஆவேசமாகக் கூறினார். சோறு போடும் கடவுளான விவசாயிகளை, கள்ளச்சாராயம், போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது போடப்படும் குண்டர் சட்டத்தில் அடைத்தது மன்னிக்க முடியாத செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு:

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பேசிய அன்புமணி, இந்த விவகாரத்திற்காக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 46 ஆண்டுகளாகப் போராடி வருவதாகத் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியும், முதல்வர் ஸ்டாலின் உள் ஒதுக்கீட்டை வழங்க மனமில்லாமல் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். 

மேலும், சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தினால், வன்னியர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியது 10.5% அல்ல, 15% இடஒதுக்கீடு என்பது நிரூபணமாவதுடன், பிற சமூகங்களுக்கும் தேவையான இடஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் அன்புமணி கூறினார்.

நந்தன் கால்வாய் திட்டம்:

90 ஆண்டுகால கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டத்திற்கு வெறும் ரூ.400 கோடி மட்டுமே தேவைப்படும் நிலையில், ரூ.4 லட்சம் கோடி பட்ஜெட் போடும் திமுக அரசு அதை ஒதுக்க மறுக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.