வேளச்சேரி தொகுதியில் வாக்குச்சாவடி எண் 92-இல் மீண்டும் வரும் 17-ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக அனல்பறந்து வந்த தேர்தல் பரப்புரைகள் பல பரபரப்பான நிகழ்வுகளுடன் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதியோடு ஓய்ந்தது. அதன் பிறகு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நடந்து முடிந்தது. 


இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை உரிய பாதுகாப்பின்றி ஸ்கூட்டரில் வைத்து எடுத்துச்சென்ற சம்பவம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்ட பொதுமக்கள் அவர்களை மடக்கிப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் மாநகராட்சி ஊழியர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து, ஊழியர்கள் கொண்டு சென்றது பழுதான விவிபேட் இயந்திரங்கள் என தேர்தல் அதிகாரி பிரகாஷ் அப்போது விளக்கமளித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.




விதிமீறல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தேர்தல் அதிகாரி கூறியிருந்தார். பழுதான அந்த இயந்திரத்தில் சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மேலும் 200 ஓட்டுக்கள் உள்ள அந்த பகுதியில் 15 வாக்குகள் அந்த இயந்திரத்தில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் அந்த பகுதிக்கு மீண்டும் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தற்போது கூறியுள்ளார். 


மறுவாக்குப்பதிவு நடக்கவுள்ள வேளச்சேரி தொகுதியில் அதிமுக சார்பில் எம்.கே.அசோக், காங்கிரஸ் சார்பில் அசன் மவுலானா, அமமுக சார்பில் சந்திரபோஸ், மக்கள் நீதி மய்யம் சார்பில் சந்தோஷ் பாபு மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் எம். கீர்த்தனா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.