தனுஷின் கர்ணன் திரைப்படத்தை பார்த்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்துக்களையும், ’கர்ணன் படத்தில், அதிமுக ஆட்சியில் நடந்த கலவரம், திமுக ஆட்சியில் நிகழ்ந்ததாக காட்டியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் கடந்த 9-ஆம் தேதி வெளியான திரைப்படம்தான் கர்ணன். தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.  






இந்நிலையில் இந்த படத்தை பார்த்த நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் படக்குழுவிற்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் கூறியுள்ளார். ’ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி கொடுத்துள்ளதாக கூறினார். அதே போல '1995ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது' என்று இப்படத்தில் உள்ள தவறை சுட்டிக்காட்டினேன்”. என ட்வீட் செய்துள்ளார். 






தவறை சுட்டிக்காட்டிய நிலையில், படக்குழுவும் இரண்டு நாட்களில் அந்த தவறை சரிசெய்துவிடுவதாக உறுதியளித்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.