டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, எழுத்தாளர் பெருமாள் முருகன் இயற்றி,  ’அண்ணல் அம்பேத்கரை புகழ்ந்து காவடிச் சிந்து’ பாடவிருப்பதாக கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 





இது தொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில், “நாளை வெளியிடப்படும் பாடல், கர்நாடக இசைத் தொகுப்பில், பாபாசாகிப் அம்பேத்கரைப் பற்றிய முதல் பாடல் ஆகும்.இப்பாடல், இனி, கச்சேரிகளில் தொடர்ந்து பாடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.


கலைகளில் அம்பேத்கரை கொண்டாட வேண்டிய அவசியத்தைக் குறித்துப்பேசிய கர்நாடக இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா, “டாக்டர் அம்பேத்கரை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். அவர் அனைவருக்கும் சொந்தமானவர். பிரித்தாள்வதற்காக ஜாதியை பயன்படுத்தி அரசியல் கட்சிகள் லாபமடையும் சூழ்நிலை இப்பொழுதும் உள்ளது. நாடும், சமூகமும் உயரவேண்டுமெனில் உடனடியாக சாதியைக் குறித்த விவாதம் நடந்தாக வேண்டும். அதற்கு அம்பேத்கரை கற்பது முக்கியம்” என தனியார் தொலைக்காட்சி செய்தியாளரிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.