வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு நிரந்தரமானதுதான் என்று முதல்வர் உறுதியளித்துள்ளார் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.


தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இடப்பங்கீடு வழங்குவதற்கான சட்டம் தற்காலிகமானதுதான் என்று சமூகநீதி குறித்த புரிதல் இல்லாத சிலர் கூறி வருகின்றனர். வன்னியர்களுக்கு 10.5% இடப்பங்கீடு வழங்குவதற்கான சட்டம் சட்டப்பேரவையில் கடந்த மாதம் கொண்டுவரப்பட்டது. அதற்கு தமிழக ஆளுனரும் ஒப்புதல் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து, வன்னியர்கள் 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டம் தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.


சட்டப்பேரவையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டால் அது நிரந்தரமான சட்டம்தான். சட்டத்தில் தற்காலிக சட்டம் என்று ஒன்று கிடையாது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம், அதற்கு மாறாக மற்றொரு சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்படும் வரை நீடிக்கும். இதுதான் நடைமுறை.




வன்னிய மக்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான அளவில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு ஆகும். சட்டப்பேரவையில், வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு சட்ட மசோதா மீதான விவாதத்தில் முதல்வர் பேசும்போதும், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு என்பது முதற்கட்டம்தான்; சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அது உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

”முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சற்றுமுன் நான் தொலைபேசியில் பேசியபோதும் கூட, வன்னியர் இடப்பங்கீட்டுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தமானது. சட்டங்களில் தற்காலிக சட்டம் எதுவுமில்லை என்பதை அவர் உறுதிசெய்தார். ஆனால், தி.மு.க. ஆதரவு ஊடகங்கள் விஷமப் பிரச்சாரம் செய்கின்றன.




சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டபிறகு, வன்னியர்களின் மக்கள்தொகை 15 விழுக்காட்டுக்கும் கூடுதல் என்பது உறுதி செய்யப்படும். அதன் அடிப்படையில், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவையும் உயர்த்தி புதிய சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுவதை பாமக உறுதிசெய்யும்” என்று கூறியுள்ளார். முன்னதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வன்னியர்களுக்கான இட  ஒதுக்கீடு தற்காலிகமானதுதான் என்று கூறியதாக ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.