சென்னை மயிலாப்பூர் தொகுதியில் திமுக சார்பில் மயிலை வேலு போட்டியிடுகிறார். தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக மயிலாப்பூரில் இன்று திமுக மகளிரணிச் செயலாளரும், மக்களவை எம்.பியுமான கனிமொழி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது, “முதல்வர் பழனிசாமி எட்டுவழிச்சாலையை தவிர எதையும் நடைமுறைப்படுத்தமாட்டார்” என்று பேசியுள்ளார்.


மயிலாப்பூர் தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் உரியமுறையில் நிறைவேற்றப்படும். இங்குள்ள வீடுகள் சரிசெய்து தரப்படும். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவிட்டு வந்துவிட்டேன். 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் எந்தப் பகுதியிலும் சாலை வசதிகள் முறையாக இல்லை.




எங்கே சென்றாலும் அங்குள்ள சாலைகள் சரியாக இருப்பதில்லை. எட்டுவழிச் சாலையைத் தவிர எடப்பாடி பழனிசாமி வேறு எதையும் போடமாட்டார். ஏனெனில் அதில் டெண்டர் விட்டால்தான் அவருக்கு லாபம். அவர் டெண்டர் பழனிச்சாமி, இல்லையெனில் அடிக்கல் நாயகன் பழனிசாமி. திட்டங்களுக்கு அடிக்கல் மட்டுமே நாட்டுவார். அதற்குப் பிறகு அவர் எதுவும் செய்யமாட்டார். செங்கல்லைக்கூட எடுத்து வைக்கமாட்டார். அவருக்கு அதற்கு நேரமில்லை” என்று பேசினார்.