போஸ்டர் அரசியலுக்கு பேர் போன ராமநாதபுரம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் மதுரை மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதுகுளத்தூரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் அதிமுக 50வது பொன் விழா ஆண்டு மாநாடு நடைபெறுகிறது. தென் மாவட்டத்தில் நடைபெறும் இந்த இந்த மாநாடு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்ற பிறகு முதல் முதலாக நடக்கிறது.
இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது.
இதற்காக மாவட்டம் தோறும் வரும் தொண்டர்களுக்கு தங்கும் இடம், உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து தர அந்தந்த மாவட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைத்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதை தினமும் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பாளர்களை தொடர்பு கொண்ட எடப்பாடி பழனிச்சாமி கண்காணித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், மதுரை மாநாட்டுக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
பசும்பொன் தேசிய கழகம், ராமநாதபுரம் மாவட்ட சார்பில் ஒட்டப்பட்டுள்ள அந்த சுவரொட்டியில், ஜாதிய வன்மத்துடன் 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கி நம் பிள்ளைகளின் வாழ்வாதாரத்தை சிதைக்க நினைக்கும் துரோகி எடப்பாடி மற்றும் இனத்துரோகிகளையும் புறக்கணிப்போம்.
மதுரை மாநாடு நடத்தினால் மட்டும் மறந்து விடுவோமா? உன் மட்டமான அரசியலை,! புறக்கணிப்போம் எடப்பாடியை! புரிந்து கொள்வோம் அரசியல் சதியை! துரோகி எடப்பாடியே! மதுரை மண்ணிற்குள் நுழையாதே! என்ற உள்ளிட்ட வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளது.
முதுகுளத்தூரில் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கட்சித் தலைமையை விமர்சிப்பதாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்து கொண்டார். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்ததாக பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்த தேர்தலுக்கு முன்பு குறிப்பிட்ட ஒரு சமுதாய வாக்குகளை கவரும் வகையில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்து தேர்தலை சந்தித்த அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. அதை நினைவுபடுத்தும் வகையில், இன்று சாதிய வாக்குகளை பிளவுபடுத்தும் முயற்சியில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் அதிமுகவினர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.