வரும் 20ஆம் தேதி தேனியில் நடைபெறவுள்ள திமுகவின் தேனி வடக்கு மாவட்ட செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் இல்லத் திருமண விழாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லவில்லை என்ற தகவல் வெளியாகி திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



முதல்வருடன் தங்க தமிழ்ச்செல்வன்


அதிமுகவில் இருந்து அமமுக - அமமுகவில் இருந்து திமுக!


அதிமுகவில் இருந்து பிரிந்து டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சென்று, பின்னர் திமுகவில் இணைந்து, கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை திமுக சார்பில் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அவரது மகள் சாந்தினியின் திருமணம் வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு கம்பத்தில் உள்ள பி.எல்.ஏ திடலில் நடைபெறுகிறது. வழக்கமாக, திமுக மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோரின் இல்லத் திருமண விழாவை அக்கட்சியின் தலைவராகவும் தமிழக முதல்வராகவும் இருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைப்பார். ஆனால், தங்க தமிழ்ச்செல்வன் இல்லத் திருமணவிழாவை முதல்வருக்கு பதில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி தலைமையேற்று நடத்தவுள்ளார்.


மதுரைக்கு செல்லும் ஸ்டாலின், தேனிக்கு செல்லாதது ஏன் ?


இன்று மதுரை செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ராமநாதபுரத்தில் நடைபெறும் தென் மண்டல பாக முகவர் கூட்டத்திலும் அதற்கு அடுத்த நாளான 18ஆம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெறும் மீனவ சங்க மாநாட்டிலும் பங்கேற்று பேசவுள்ள நிலையில், ஒரு நாள் இடைவெளியில் 20ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை தங்க தமிழ்ச்செல்வன் இல்ல திருமணம் நடைபெறுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து மீண்டும் மதுரை வந்து விமானம் மூலம் சென்னை திரும்பவுள்ள முதல்வர், ஏன் அருகே இருக்க கூடிய தேனிக்கு சென்று தங்க தமிழ்ச்செல்வன் இல்ல திருமண விழாவை நடத்தி வைக்கவில்லை என்ற கேள்வி எழுந்திருக்கிறது.


தங்கத் தமிழ்செல்வனின் கட்சி செயல்பாட்டில் அதிருப்தியா அல்லது தன்னுடைய மகள் திருமண அழைப்பிதழை ஓபிஎஸ்-சை பார்த்து நேரடியாக கொடுத்தது காரணமா என பல்வேறு ஊகங்களை தேனி மாவட்ட திமுகவினர் எழுப்பி வருகின்றனர். முதல்வர் செல்லவில்லையென்றாலும் அவரது மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினையாவது அனுப்பி வைத்திருக்கலாம் ஆனால் அவரையும் முதல்வர் செல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.



ஓபிஎஸ்-சை சந்தித்து அழைப்பிதல் கொடுத்த தங்க தமிழ்ச்செல்வன்


அமைச்சர் ஐ.பெரியசாமி திருமணத்தை நடத்தி வைக்கும் நிலையில், அந்த விழாவில் திமுகவின் முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகிக்கிறார். அதோடு, அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, சக்கரபாணி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று மண மக்களை வாழ்த்தவுள்ளனர். இருப்பினும், இத்தனை அமைச்சர்கள் பங்கேற்கும் விழாவிற்கு ஏன் முதல்வர் வரவில்லையென கேள்வி எழுந்த நிலையில், இது தொடர்பாக நாம் அறிவாலய வட்டாரங்களில் விசாரித்தபோது அதற்கு உளவுத்துறைதான் காரணம் என்ற பகீர் தகவலை அவர்கள் நம்மிடையே பகிர்ந்தார்கள்.



முரசொலியில் இடம் பெற்ற செய்தி


உளவுத்துறை அளித்த ரிப்போர்ட் - ஒகே சொன்ன முதல்வர் 


20ஆம் தேதி தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் இல்லத் திருமணம் நடைபெறும் அதே நாளில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் அக்கட்சியின் பொன்விழா மாநாடு நடைபெறுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மதுரைக்கு வாகனங்களில் வரும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த நேரத்தில் மதுரை வழியாக தேனி செல்வது சரியாக இருக்காது என்றும், அப்படி முதல்வர் வாகனம் செல்லும்போது, தேவையில்லாமல் சட்ட ஒழுங்கு பிரச்னையை அதிமுகவினர் ஏற்படுத்த முயற்சி செய்வர் என்பதாலும் அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தேனி திருமண விழாவிற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன் காரணமாகவே முதல்வரும் உதயநிதி ஸ்டாலினும் தேனி செல்வதை தவிர்த்துள்ளனர். அதோடு, 20ஆம் தேதி ஆளுநரை கண்டித்து சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவுள்ள நிலையில், அவரால் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.






இப்படியான சூழலில், திருமணத்தில் பங்கேற்க முடியாது என்பதால்தான், அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கொண்ட பெரும் படையையே தனக்கு பதிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்க தமிழ்ச்செல்வன் இல்லத் திருமண விழாவிற்கு அனுப்பி வைக்கிறார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.