காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தலைவர் பதவியில் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை இருப்பார்கள், அதனை தொடர்ந்து வேறு தலைவர் நியமனம் செய்யப்படுவார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி கடந்த 5 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறார். 3 ஆண்டுகள் நிறைவு செய்தால் வேறு தலைவர் மாற்றப்படுவது வழக்கும். ஆனால் கே.எஸ் அழகிரி பொறுப்பேற்று 5 ஆண்டுகள் ஆகிறது.
அடுத்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் யார்?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ் அழகிரி பொறுப்பேற்ற பின் சந்தித்த அனைத்து தேர்தலிலும் வெற்றி கிடைத்தது. இது போன்ற சூழலில் அவர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அப்படி மாற்றப்பட்டால் அடுத்த தலைவர் யாராக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக தேர்தல் வெற்றியில் முன்னால் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் முக்கிய பங்கு வகித்ததால் இவரது பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாக்கூர் மற்றும் ஜோதிமணி ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
கார்த்தி சிதம்பரம் மீது கட்சி அதிருப்தியில் இருப்பதால் அவருக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களை தவிர செல்லக்குமார், மாணிக்கம் தாகூர் ஆகியோர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என கூறப்படுகிறது.
டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்:
இதனிடையில் நாடாளுமன்றம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில தேர்தல்களை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி மாநில தலைமையை மாற்றுவதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றதாக தகவல் வெளியானது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரியும் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”சென்ற சட்டமன்ற தேர்தலில் 72 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளோம். பா.ஜ.க எங்களுடன் போட்டி என கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் போட்டியிட்ட 23 இடங்களில் 4 இடங்கள் மட்டுமே வெற்றி பெற்றார்கள். ஆனால் காங்கிரஸ் தரப்பில் 72% வெற்றி கிடைத்தது. முன்பை விட அதிக தொகுதிகள் கேட்டு அதிக இடத்தில் வெற்றி பெறுவோம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக யாரை நியமித்தாலும் மகிழ்ச்சிதான் என்றும் தலைவர் பதவி மாற்றம் குறித்த தகவல் அறிந்து வரவில்லை” என குறிப்பிட்டார்.
இவர்தான் அடுத்த தலைவர்?
இந்நிலையில் இன்று மாலை இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் வருவதை ஒட்டி கட்சி நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் இந்த மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் கே.எஸ் அழகிரிக்கு பதிலாக செல்வப்பெருந்தகை நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நியமனம் செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.