தி.க. தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் என்.ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பவர் என்ற போதிலும், அவர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சென்னையில் சிகிச்சை பெறும் நிலையில், அவசர அவசரமாக மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள்  நியமனத்தை செய்தனர். அதன்மூலம் 6 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட பா.ஜ.க.வின் பலத்தை 9 ஆக உயர்த்தியும், வெற்றி பெற்ற சுயேச்சைக்காரர்கள் 3 பேர்களிடம் பா.ஜ.க-வுக்கு ஆதரவுக் கடிதம் வாங்கவும் முயற்சி செய்தனர்.




30 பேர் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்தில் 10 பேர் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் - அறுவர் பா.ஜ.க. உறுப்பினர் என்றாலே பெரும்பான்மை, மேலும் என்.ஆர். காங்கிரசின் ரங்கசாமி அவர்களின் அரசை பலமாக்க வேண்டும் என்பது முன் வைக்கப்படும் ஒரு வாதமானால், அதற்கு என்றும் ஆபத்து இல்லை என்ற நிலையை உருவாக்க சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவைப் பெற்றாலே ஆபத்து தவிர்க்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆனால் அவசர அவசரமாக மூன்று பேர் நியமனம் (பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்) எதற்காக?


இன்னும் அமைச்சரவையே அமையாத நிலையில் இப்போது மக்கள் வாக்களித்து வராமல் பின் வாசல் நியமனம் மூலம் மூவர் வந்து பதவியேற்க வைத்ததும் இப்போது, துணை முதல்வர் உட்பட பா.ஜ.க.வுக்கு மொத்தம் ஆறு அமைச்சர்களில் மூன்று அமைச்சர் பதவிகளை எப்படியாவது பெற்று, பா.ஜ.க.விடமே உண்மையான ஆட்சி அதிகாரம் இருக்கும் நிலையை உருவாக்கி, சுதந்திரமாக, செயல்பட முடியாத முதல் அமைச்சராக பெயரளவில் ரங்கசாமியை ஆக்கி, பதுமையைப் போல் அமர்த்திடும் அரசியல். பீகாரில் நிதிஷ்குமார் முதல்வராகவும், துணை முதல்வராக பா.ஜ.க.வே  உண்மையாக ஆட்சி புரிந்து வருவதைப் போன்று ஒரு நிலையை புதுச்சேரியிலும் நடத்திடவே இத்தகைய முன்னேற்பாடுகள்.




பா.ஜ.க.விடம் சரணாகதி அடைவதைத் தவிர வேறு வழி இல்லை என்று ஒரு நெருக்கடியை என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுத்தி, பா.ஜ.க.வின் காவிக் கொடியை புதுச்சேரியில் 30-இல் 6 இடங்களை மட்டுமே பெற்ற கட்சியாக இருந்தும் வித்தைகள் மூலம் இப்படி ஒரு விபரீத அரசியலை அரங்கேற்றத் துடிக்கிறார்கள்.


முதல் அமைச்சர் ரங்கசாமி மவுன சாமியாகவே இருந்து இந்த நிலைக்கு உடன்பட்டு, தேர்ந்தெடுத்த ஜனநாயகத்தை வெறும் கேலிக் கூத்தாக்கப் போகிறாரா? அல்லது மக்களின் தீர்ப்பைப் பற்றிக் கவலைப்படாமல் அரசியல் நடத்தப் போகிறாரா?  அல்லது உண்மையான மக்களாட்சியை நடத்தப் போகிறாரா? என்பதே  அரசியல் நோக்கர்களின் ‘மில்லியன் டாலர்’ கேள்வி.


இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். முன்னதாக, புதுவையில் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில், அம்மாநில முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி வெற்றி பெற்றது. அக்கட்சியின் கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வினர் தங்களுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமியை வற்புறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.