மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள்  இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆனால் கடந்த வாரம் முழுவதுமே விலைவாசி உயர்வு, அக்னிபத் திட்டம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்  முழுவதுமாக முடங்கியது. இதனிடையே விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்களவையில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தியதற்காக 4 காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையிலிருந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று முடிவடையும் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். 






காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் டிஎன் பிரதாபன் ஆகியோர் காஸ் சிலிண்டர் விலை உயர்வு, மாவு, மோர் போன்ற பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தியபடி இருந்தனர். அவர்களை எச்சரித்த சபாநாயகர் ஓம் பிர்லா,  போராட்டம் நடத்த விரும்பினால், வீட்டுக்கு வெளியே பிளக்ஸ் பேனர்களை பிடித்துக்கொண்டு நடத்தி கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் 4 பேரும் பேனர்களை பிடித்துக் கொண்டு அமளியில் ஈடுபட்டதால் அவர்களை இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். 






இந்நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடிய நிலையில் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை 11.45 மணி வரைக்கும், மாநிலங்களவை 12 மணி வரைக்கும் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 எம்.பி,க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண