ராகுல் காந்தி நடைபயணத்தின் விளைவாக மோடி அரசை அகற்றும் இந்தியா கூட்டணி என்ற சூழல் உருவாகியுள்ளதாக கரூரில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பேட்டியளித்தார்.


ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு ஒரு வருடம் ஆன தினத்தை முன்னிட்டு  கரூரில் எம்.பி. ஜோதிமணி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம் சென்றனர்.


 


 




 


ராகுல் காந்தி இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு ஒரு வருடம் ஆனதை நினைவு கூறும் விதமாக இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கரூர் மாநகரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் நடைபயணம் மேற்கொண்டனர். பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலைமுன்புறம் துவங்கிய இப்பேரணி ஜவஹர் பஜார், ஆசாத் சாலை வழியாக சென்று மாநகராட்சி பூங்காவில் முடிவடைந்தது. மாநகராட்சி பூங்காவில் வைக்கப்பட்டிருக்கும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அன்பை விதைப்போம், பாஜகவை வீட்டிற்கு அனுப்புவோம் என கோஷம் எழுப்பி பேரணியை முடித்துக் கொண்டனர்.



அப்போது செய்தியாளர்களை சந்தித்த எம்.பி ஜோதிமணி,


 


 


 




 


இந்திய மண்ணில் வெறுப்பை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தமும், மோடி அரசையும் வீட்டுக்கு அனுப்பி, அன்பை மட்டுமே விதைக்க வேண்டும் என்று கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு இன்மை, வெறுப்பு அரசியல் என ஒரே மாதிரியான பிரச்சினையை எடுத்துரைத்தனர். மேலும், மோடி அரசின் ஆட்சியை அகற்ற வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.  


 


 




 


அந்த நடைபயணத்தின் விளைவாக மோடி அரசை அகற்றும் வகையில் இந்தியா கூட்டணி என்ற சூழல் ஒன்று உருவாகியுள்ளது. ராகுல்காந்தியின் நடைப்பயணத்தின் ஓராண்டு நிறைவு தினத்தை கொண்டாடுவதற்காக இந்த பேரணி நடைபெற்றதாக தெரிவித்தார்.