2024ஆம் ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வானது, நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இளங்கலை நீட் தேர்வுக்கு சுமார் 23.8 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இத்தேர்வுக்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 557 நகரங்கள் மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த 14 நகரங்களிலும் தேர்வு நடைபெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் இந்த தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டானது, கடந்த 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வானது இன்று தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.
நீட் தேர்வின் கேள்வித்தாள் கசிந்ததா?
இந்த நிலையில், இளநிலை நீட் தேர்வின் கேள்வித்தாள் கசிந்ததாக புகார் எழுந்து வருகிறது. நேற்று நடந்த தேர்வின் கேள்வித்தாள் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே சமூக வலைத்தளங்களில் வெளியானதாக கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த தேசிய தேர்வு முகமை, "முற்றிலும் ஆதாரமற்றது. இதற்கு எந்த அடிப்படையும் இல்லை. சமூக ஊடகங்களில் பரவும் வினாத்தாள்களுக்கும் உண்மையான தேர்வு வினாத்தாளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
நுழைவு வாயில்கள் மூடப்பட்டு தேர்வு தொடங்கிய பிறகு, எந்த வெளி நபரும் அல்லது நிறுவனமும் தேர்வு மையங்களை அணுக முடியாது. மையங்கள் சிசிடிவி கண்காணிப்பில் உள்ளன" என தெரிவித்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராகுல் காந்தி, மாணவர்களின் கனவுகளுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக கூறினார்.
கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி:
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி குறிப்பிடுகையில், "நீட் தேர்வுத் தாள் கசிவு என்ற செய்தி, 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கனவுக்கு செய்யும் துரோகம். 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர வேண்டும் என்று கனவு காணும் மாணவர்களாக இருந்தாலும் சரி, அரசு வேலைக்காக போராடும் நம்பிக்கைக்குரிய இளைஞர்களாக இருந்தாலும் சரி, மோடி அரசு அனைவருக்கும் சாபமாகிவிட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசின் திறமையின்மையால் இளைஞர்களும் அவர்களது குடும்பத்தினரும் தங்கள் எதிர்காலத்தை விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி உள்ளனர். பேசுவதற்கும் அரசாங்கத்தை நடத்துவதற்கும் வித்தியாசம் இருப்பதை இப்போது அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
கடுமையான சட்டங்களை இயற்றுவதன் மூலம் இளைஞர்களை தேர்வுத்தாள் கசிவிலிருந்து விடுவிக்க காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. மாணவர்களுக்கு ஆரோக்கியமான, வெளிப்படையான சூழலை உருவாக்குவது எங்கள் உத்தரவாதம்" என குறிப்பிட்டுள்ளார்.