அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் ஒன்றாக உத்தர பிரதேசம் உள்ளது. நாட்டிலேயே அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக உள்ள உத்தர பிரதேசம், இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.


உத்தரப் பிரதேசத்தில் குறிப்பிடத்தகுந்த அளவில் தொகுதிகளை கைப்பற்றுபவர்களே மத்தியில் யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்பதை தீர்மானிக்கிறார்கள். கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு உத்தர பிரதேசத்தில் பெற்ற வெற்றி முக்கிய பங்காற்றியது.


"முஸ்லிம் சமூகமும் உணர்ந்துள்ளது"


கடந்த முறை போன்று இந்த முறையும் அதிக தொகுதிகளை கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக, பிரதமர் மோடி தொடங்கி உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரை, அங்கு பாஜக தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.


இந்த நிலையில், தெளராஹராவில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, இந்தியா கூட்டணி மீதும் காங்கிரஸ் மீதும் சரமாரி குற்றச்சாட்டு சுமத்தினார். இந்தியா கூட்டணியானது இஸ்லாமியர்களை கைப்பாவையாக பயன்படுத்துவதாக கூறினார்.


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "பிரதம மந்திரி வீடு கட்டித் தரும் திட்டத்தின் கீழ் அனைத்து ஏழைகளுக்கும் வீடுகள் வழங்கப்பட்டதை முஸ்லீம் சகோதர, சகோதரிகள் பார்க்கிறார்கள். உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் தண்ணீர் இணைப்பும் கேஸ் சிலிண்டர் இணைப்பு என ஒவ்வொரு அரசு சலுகையும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.


"இடஒதுக்கீட்டை பறிக்க நினைக்கிறது காங்கிரஸ்"


அவர்களும் (முஸ்லிம்கள்) அனைத்து திட்டங்களின் பலன்களையும் பாகுபாடின்றி பெற்று வருகின்றனர். காங்கிரஸும் இந்தியாக் கூட்டணியும் தங்களைக் கைப்பாவையாக நடத்துகின்றனர் என்பதை முஸ்லிம் சமூகமும் உணர்ந்திருக்கிறது.


அதனால்தான் முஸ்லிம் சமூகமும் இந்த வாக்கு வங்கி அரசியலில் இருந்து இருந்து விலகி நிற்கிறது. இப்போது, ​​முஸ்லிம் வாக்கு வங்கியைக் காப்பாற்ற, இவர்கள் (எதிர்க்கட்சிகள்) புதிய விளையாட்டை விளையாடி, வெளிப்படையாக சமரச அரசியல் செய்து வருகின்றனர்.


எதிர்க்கட்சிகளின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக்கின் சிந்தனையை பிரதிபலிக்கிறது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க கூடாது என்று பி.ஆர்.அம்பேத்கரும், ஜவஹர்லால் நேருவும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.


ஆனால், காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதில் உறுதியாக உள்ளது. மதத்தின் அடிப்படையில் மீண்டும் நாட்டை பிளவுப்படுத்த களமிறங்குகிறார்கள் என்பதை அவர்கள் உணரவில்லை.


கர்நாடகாவில் முஸ்லிம்கள் ஒரே இரவில் ஓபிசி ஆக்கப்பட்டு, ஓபிசி கோட்டாவில் இருந்து இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அவர்கள் (காங்கிரஸ்) கர்நாடகாவில் செய்ததை இப்போது நாடு முழுவதும் செய்ய விரும்புகிறார்கள். எஸ்சி/எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீட்டை பறிக்க நினைக்கிறார்கள்" என்றார்.