வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது, சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமையை அச்சமின்றி எதிர்த்துப் போராடியவர் பெரியார் என ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் என்ற இடத்தில் மகாதேவர் கோயில் உள்ளது. அந்தக் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்களான ஈழவர், புலையர் ஆகியோர் நடக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தெருக்களில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்களில் உயர்சாதியாக கருதப்படுவோர் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஈழவர், தீயர், புலையர் ஆகியோர் நடக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
வைக்கத்தில் அப்படி என்னதான் நடந்தது?
இப்பிரச்சனைக்காக 1924ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி காலை 6 மணிக்கு போராட்டம் நடத்த காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்தனர். இதுதான் வைக்கம் போராட்டத்தின் முதல் போராட்டமாகும். திட்டமிட்டபடி, மார்ச் முப்பதாம் தேதி நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் அந்த சாலைக்கு அருகில் திரண்டனர். இதையடுத்து காவல்துறை அவர்களைக் கைதுசெய்தது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். எனவே தலைவர்கள் இல்லாமல் போராட்டம் தத்தளித்தது.
கோயில் நுழைவுப் போராட்டங்களுக்கு முன்னோடி:
கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில், வரதராஜுலு நாயுடு, எஸ். ஸ்ரீநிவாஸ அய்யங்கார் போன்ற வேறு பல காங்கிரஸ் தலைவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வைக்கம் சென்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது இருந்த பெரியார் வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். அங்கு பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு பெரியார் அழைத்துச் சென்று, வைக்கம் வீரர் என்ற பட்டப் பெயரையும் பெற்றார். இந்தியாவில் நடந்த கோயில் நுழைவுப் போராட்டங்கள் அனைத்திற்கும் முன்னோடியாக திகழ்வது வைக்கம் போராட்டம்.
இந்த நிலையில். வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவை ஒட்டி, எக்ஸ் தளத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில் "வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது, சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமையை அச்சமின்றி எதிர்த்துப் போராடிய மகாத்மா காந்தி, பெரியார், ஸ்ரீ நாராயண குரு மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த அஞ்சலிகள். அவர்களின் தொலைநோக்கு கொள்கைகளுக்கான நமது உறுதிப்பாட்டை புதுப்பித்து, அவர்கள் முன்வைத்த கொள்கைகளை நிலைநிறுத்த நியாயமான, சமத்துவமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை கட்டியெழுப்ப பாடுபடுவோம்" என குறிப்பிட்டுள்ளார்.