மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலுடன், சட்டமன்ற மற்றும் மக்களவை என மொத்தம் 50 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு காரணம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், ரேபரேலி தக்கவைத்து வயநாடு தொகுதியை விட்டு கொடுத்தார். 


பிரியங்கா காந்தி வேட்புமனுதாக்கல்:



இந்நிலையில், வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், அந்த தொகுதி மீண்டும் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. 
இந்நிலையில் , வயநாடு மக்களவை இடைத்தேர்தலில், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேரா, நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.  வேட்புமனு தாக்கலின் போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் உடனிருப்பார்கள் என தகவல் தெரிவிக்கின்றன.


ராகுல் காந்தி உருக்கம்:



இந்நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் ராகுல் காந்தி தெரிவித்ததாவது “ "வயநாடு மக்கள் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளனர். தனது சகோதரி  நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். வயநாடு தொகுதி மக்களுக்கு, எனது சகோதரி பிரியங்கா காந்தியை விட சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது" 


"அவர் வயநாட்டின் மக்களுக்கு பாதுகாப்பாளராகவும், பாராளுமன்றத்தில் சக்திவாய்ந்த குரலாகவும் இருப்பார் என்று நம்புகிறேன்," நாளை மதியம் 12 மணிக்கு மாவட்ட ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும், மக்களுடன் இணைந்து, பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதி செய்வோம்" எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.






வயநாடு தொகுதியை ராகுல் காந்தி விடுவித்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்து வரும் பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளார் என்பதால், அவர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகவும், அவரை எப்படியாவது வெற்றி பெறவைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.