தமிழகத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாத ஸ்டாலினின் தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது “ சென்னையில் 19.10.2024 அன்று நடைபெற்ற தென் மாநிலங்களுக்கு இடையேயான சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, நீர் மேலாண்மை குறித்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது தடுக்கப்பட்டுள்ளது என்று பெருமை பேசியுள்ளார். ஆனால், அக்கூட்டத்தில் கலந்து கொண்ட தென் மாநிலங்களின் DGP-க்களிடம் அவர்களது மாநிலங்களின் வழியாக தமிழகத்திற்கு கடத்தப்படும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை தடுப்பதற்குத் தக்க நடவடிக்கைகளை எடுங்கள் என்ற வேண்டுகோளைக்கூட முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தவில்லை.
”கடத்தலின் கேந்திரமாக தமிழகம்?”
தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் எத்தனை ஆயிரம் ஏக்கரில் கஞ்சா செடி பயிரிடப்பட்டு வந்தது? 'இதில் எந்த அளவு குறைக்கப்பட்டது அல்லது எப்படி முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற முழு விவரங்களையும்,
(Cocaine மெத்தா பெட்டமைன் போதை மாத்திரைகள் ) உட்பட பலவகைப்பட்ட போதைப் பொருட்கள் தமிழகம் வாயிலாக வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. தமிழகம் போதைப் பொருட்கள் கடத்தலின் கேந்திரமாக விளங்குவது வருத்தமளிக்கிறது.
இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களை அரசு, கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் போதைப் பொருட்கள் கடத்தலைத் தடுத்து. பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை மருத்துகளை பறிமுதல் செய்வதாகச் செய்திகள் வருகின்றன. இதுபோன்ற கடத்தல்களில், திமுக-வின் அயலக அணி நிர்வாகியாக இருந்து கைதான ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வருகின்றன.
சமீபத்தில் காவல்துறை DGP அவர்கள், தமிழகத்தில் போதைப் பொருள் பிடிபட்ட விவரங்களை வெளியிட்டிருக்கிறார். அதில் 2021-ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 2024 வரை ஆண்டு வாரியாக போதைப் பொருள் பிடிபட்ட விவரங்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள பெத்தபெட்டமைன் 2021-ஆம் ஆண்டு 4 கிலோ பிடிபட்ட நிலையில் 2023-ஆம் ஆண்டு 28 கிலோவிற்கு மேல் பிடியட்டுள்ளதாகவும், இதுவரை கேள்விப்படாத மெத்தகுவலான் (thaguslone) என்ற போதைப் பொருள் 2023-ஆம் ஆண்டு & கிலோ பிடிபட்டுள்ளதாகவும் ஹசீஸ் (Hashish) என்ற போதைப் பொருள் 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை 77 கிலோ பிடிபட்டுள்ளதாகவும், போதை மாத்திரைகள் சுமார் 38,500 பிடிபட்டுள்ளதாகவும் DGP தெரிவித்துள்ளார்.
” தமிழக காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் “
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ் நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை காவல்துறை தலைமை இயக்குநரே தனது அறிக்கையில் ஒத்துக்கொண்டுள்ளார். இதனை மறந்த நிர்வாகத் திறமையற்ற முதல்வர் ஸ்டாலின் எந்தவித குற்ற உணர்வும் இன்றி தமிழகத்தில் போதைப் பொருள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற பொய் மூட்டைகளை கட்டவிழ்த்துவிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்.
கனவு கலைந்து உலகிற்கு வரும்போது இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இனியாவது தமிழக காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி போதையில்லா தமிழகத்தை உருவாக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணியில் புகைய ஆரம்பித்துவிட்டது என்றும், வரும் தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். அனுபவத்தால், உழைப்பால் தனக்கு பதவி கிடைத்ததாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, உதயநிதிக்கு 46 வயதுதான் ஆகிறது, நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன்; உதயநிதியின் வயதைவிட என் அரசியல் அனுபவம் அதிகம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.