காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.


இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி பேசியதாவது,


“தகுதி நீக்கத்தை பற்றி எனக்கு கவலையில்லை. எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்பட மாட்டேன். பல போலி நிறுவனங்கள் மூலம் அதானி குழும முதலீடுகள் செயல்படுகின்றன. அதானியின் போலி நிறுவனங்களில் ரூ.20,000 கோடி முதலீடு செய்தது யார் என்று கேள்வி கேட்டேன். யாருடைய பணம், அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்கு பதில் தேவை. அதானி பற்றி தொடர்ந்து கேள்வி கேட்பதை நிறுத்தவே, என்னை தகுதி நீக்கம் செய்துள்ளனர்.


அதானி குறித்து பேசுவதை கண்டு, பிரதமர் மோடி பயப்படுவது, அவரது கண்களில் தெரிந்தது. பதவி நீக்கம் எனக்கு கிடைத்த பரிசு போன்றது, இதனால் எனக்கு கவலை இல்லை. 






அவர்கள் என்னை நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்தாலும், நான் என் வேலையை தொடர்ந்து செய்வேன். நான் பாராளுமன்றத்திற்குள் இருக்கிறேனா இல்லையா என்பது முக்கியமல்ல. நாட்டுக்காக தொடர்ந்து போராடுவேன்.


நாட்டின் ஜனநாயகத் தன்மையைப் பாதுகாப்பது, அதாவது நாட்டின் நிறுவனங்களைப் பாதுகாப்பது, நாட்டின் ஏழை மக்களின் குரலைப் பாதுகாப்பது மற்றும் பிரதமருடனான உறவைப் பயன்படுத்திக் கொள்ளும் அதானி போன்றவர்களைப் பற்றிய உண்மையை மக்களுக்குச் சொல்வது எனது வேலை.


நாட்டில் ஜனநாயகம் தாக்கப்படுகிறது என்று நான் ஏற்கனவே பல முறை கூறியுள்ளேன். இதற்கான உதாரணங்களை நாம் ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையிலான உறவு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டேன்.






ராணுவம், விமானத்துறை தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடனேயே முன்வைக்கிறேன். இந்திய அரசுக்கு எதிராக வெளிநாட்டு உதவியை நாடியதாக அமைச்சர்கள் கூறுவது முற்றிலும் தவறு. இதுகுறித்து விளக்கமளிக்க நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் நேரம் கேட்டேன்.


அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு? தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். கேள்வி கேட்பதை ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்” எனத் தெரிவித்தார்.


Also Read: Rahul Gandhi: 'மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல; பிரதமர் மோடியின் கண்களில் பயத்தைக் கண்டேன்' - ராகுல் காந்தி பொளேர்