அதானியின் ஷெல் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பணம் வந்தது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ள ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் கண்களில் பயத்தைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்.
2014 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி பேசியதாக, ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் மீதான விசாரணையின் முடிவில், ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. அதேநேரம், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியதோடு, மேல் முறையீடு செய்ய 1 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பின் காரணமாக வயநாடு தொகுதியின் எம். பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு
இதனிடையே, தனக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து அதற்கு தடை பெற ராகுல் காந்திக்கு ஒரு மாதம் மட்டுமே கால அவகாசம் உள்ளது. அதற்குள் தண்டனைக்கு தடை பெறாவிட்டால் ராகுல் காந்தி சிறையில் அடைக்கப்படுவார். இதனால், அவரது தேர்தல் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, தகுதி நீக்கம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு இன்று தொடரப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ராகுல் காந்தி, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து இன்று (மார்ச் 25) பேசினார்.
அப்போது கூறிய அவர், “ஒரு முறை அல்ல, நிரந்தரமாக என்னைத் தகுதி நீக்கம் செய்தாலும் கேள்வி கேட்பதை நான் நிறுத்தப்போவதில்லை. மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, காந்தி.
நான் பேசுவதைக் கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். அதானி பற்றி நான் பேசும்போது, அவரின் கண்களில் பயத்தைப் பார்த்தேன். பிரதமரின் அச்சத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனக்கு உண்மையைப் பேசுவதில் மட்டுமே விருப்பம் உள்ளது. அதை தொடர்வேன்.
அதானியின் ஷெல் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பணம் வந்தது எப்படி? மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பி இருந்தேன். இதுவரை அதற்கு பதில் இல்லை.
அதானி குறித்து நான் அடுத்த முறை பேசக்கூடாது என்பதற்காகவே என்னைத் தகுதி நீக்கம் செய்துள்ளனர். லண்டனில் நான் பேசியது குறித்து விளக்கம் அளிக்க, மக்களவையில் சபாநாயகரிடம் அனுமதி கோரி இருந்தேன். ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.