தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வாய்க்காலம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற சூழலில், இந்த கூட்டத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார், அப்போது அவர் பேசுகையில், "கொட்டுகின்ற மழையை பொருட்படுத்தாமல் இங்கு கூடியிருக்கின்ற கூட்டத்தை பார்த்தால் தமிழகத்தில் மாற்றம் நடக்கும் என்ற சந்தேகத்திற்கு இடமில்லாமல் உள்ளது. 40, 50 ஆண்டுகால கட்சியின் உழைப்பு தமிழகத்தின் பாஜக தனி முத்திரை பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. பாஜக தொண்டர்கள் நடத்திக் காட்ட முடியாத ஒன்றை கண்டிப்பாக நடத்திக் காட்டுவார்கள். எந்த முடிவு எடுத்தாலும் அது நல்ல முடிவாக இருக்கும் என்பதை மக்களை பார்க்கும் போது தெரிகிறது. தென்காசியில் இருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினர் டெல்லிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பொதுக்கூட்டமானது நடைபெற்று வருகிறது.




இந்தியாவின் வரைபடத்தில் காசியையும், தென்காசியையும் பிரதமர் இணைத்துள்ளார். தென்காசி என்ற பெயர் ஒருமை பாட்டை காட்டுகிறது. யாரும் விருப்பப்பட்டு அரசியலுக்கு வரவில்லை, எனக்கும் அரசியலுக்கும் பழமையில் தூரம் இருந்தது. காலத்தின் கட்டாயம், ஆண்டவனின் அருள் மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் போன்றவை அரசியலுக்கு என்னை இழுத்தது இப்ப இல்லை என்றால் எப்பவும் இல்லை என்ற வைராக்கியம் ஏற்பட்டு பாஜகவில் என்னை ஐக்கியமாக்கிக் கொண்டேன்” என்றார்.


தொடர்ந்து திமுக அரசின் செயல்பாடுகளை 3 பாணியில் வர்ணித்து குற்றம் சாட்டினார், சரித்திரத்தை மாற்றி சமூக நீதியை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என கூறி 1967 லிருந்து ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாகவும், ஆயிரம் பொய்யை சொல்லி கல்யாணம் செய்வார்கள் என்பது போல லட்சம் பொய்யை சொல்லி திமுகவினர் ஆட்சிக்கு வந்துள்ளார்கள். மாட்டின் கொம்பில் இருந்து பால் வடியும் என்று சொல்லுகின்ற கூட்டம் திமுகவினர்.


நீட் வேண்டும் என 2010 இல் கையெழுத்து போட்டு அதனை கொண்டு வந்தது திமுக. நீட் தேர்வால் தற்கொலை செய்த குழந்தைகளை வைத்து அரசியல் செய்து சடலத்தின் மூலம் வாக்கு பெற்று திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. சரித்திரத்தை மாற்றுவது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து சரித்திரம் உருவானது என்று சொல்வது பொய் சொல்லி மாட்டிக்கொண்டால் அதனை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாகுவது உள்ளிட்ட மூன்று முகங்களை கொண்டது தான். அதனை உடைக்க வேண்டிய கட்டாயம் பாஜகவிற்கு உள்ளது. அரசால் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாடல் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக நுழைவு தேர்வு வைத்து மாணவர்கள் தேர்வு செய்து வருகின்றனர். இது குறித்து அமைச்சர்களிடம் கேட்டால் அப்படி ஒன்றும் இல்லை என பொய் சொல்கிறார்கள். மாடல் பள்ளி தமிழக அரசுக்கு வேண்டுமென்றால், எங்களுக்கு நீட் வேண்டும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான உட்கட்டமைப்பு மட்டும் தான் இல்லை. 2026 மார்ச் மாதத்திற்குள் எய்ம்ஸ் காண முழு உட்கட்டமைப்பும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும். தமிழகத்தில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மிகப் பெரிய மருத்துவமனையாக இருக்கும் இந்த மருத்துவமனை நாட்டில் உள்ள மற்ற மருத்துவமனைகளை விட பெரிய மருத்துவமனையாகவும் அமையும் என்றார்.




மேலும், “தமிழகத்தில் சாராயம் விற்ற வருவாய் ரூ.46 ஆயிரம் கோடி உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு அந்த தொகையிலிருந்து 2000 கோடியை மட்டும் மத்திய அரசிற்கு கொடுத்தால் விரைவில் மிகப்பெரிய அளவிலான எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். இரண்டு லட்சத்து 24 ஆயிரம் கோடி திமுகவின் முக்கிய புள்ளிகள் 27 நபர்களிடம் உள்ளது. இந்த தொகை தமிழகத்தின் ஜிடிபியின் 10 சதவீதமாகும். ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவில் உள்ள முக்கிய புள்ளிகளின் ஊழல் பட்டியலை வெளியிட உள்ளேன். அன்று நடைபெறும் தமிழ் புத்தாண்டு ஊழலுக்கு எதிரான திருவிழாவாக இருக்கும். அதன் பிறகு பாஜகவின் அரசியல் என்னவென்று அவர்களுக்கு தெரியும். அனைத்து பொய்களையும் வைத்து திமுகவை கட்டமைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. ராகுல்காந்தி பேசிய வார்த்தைக்காக தொடரப்பட்ட வழக்கில் வழங்கிய தீர்ப்புக்கு பாராளுமன்ற சபாநாயகர் எடுத்த நடவடிக்கையால் மறுபடியும் வயநாட்டுக்கு தேர்தல் வரவுள்ளது. இந்தியாவில் மொத்தம் ஒன்பது எம்பிக்கள், 4 எம்எல்ஏக்கள் இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸின் நிலைமை ஐயோ பரிதாபம். ஐசியுவில் ஆக்சிஜன் கொடுக்கும் நிலையில் உள்ளது. அரசால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப் திட்டத்தை நிறுத்திவிட்டு அந்த நிதியிலிருந்து கடலில் பேனா வைக்க முயற்சி நடக்கிறது, பேனா சிலை வைக்கும் அன்றைக்கு திமுகவின் அழிவு ஆரம்பமாகும். திட்டங்களை நிறைவேற்றுவதில் திமுகவை போல் இல்லாமல், அனைத்து திட்டத்தையும் மோடி அரசு சொன்ன தேதிக்கு முன்னர் முடித்துக் காட்டுகிறது. 9 ஆண்டுகளில் சொன்ன திட்டங்கள் அனைத்தையும் சொன்ன தேதியை தாண்டி நிறைவேற்றாமல் இருந்தது இல்லை., 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அனைத்து கிராம வீடுகளுக்கும் தண்ணீர் கொடுக்கும் ஜல்ஜீவன் திட்டம் நிறைவேற்றப்பட்டு, அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் கிடைக்கும். 2024ல் நம்பிக்கை மாற்றம் நாட்டின் முன்னேற்றம் ஆகிய மூன்றையும் பார்த்து மக்கள் வாக்கு பெட்டியில் தாமரை பட்டனை அழுத்தப்போகின்றனர். தமிழகத்திலிருந்து எம்பிக்களை அனுப்ப வேண்டிய கட்டாயம் நமக்குள்ளது. திமுகவின் பொது பிரச்சாரத்தை முறியடிப்போம் திமுக எந்த அஸ்திரத்தை எடுத்தாலும் நாம் பார்த்துக் கொள்வோம்” என தெரிவித்தார்.