கோவை தெற்கு தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை? சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கால் வானதி அதிர்ச்சி? தமிழக சட்டமன்றத்தேர்தலில் கோவை தெற்கு என்பது அனைவரையும் தன்பக்கம் ஈர்த்த தொகுதியாகவே இருந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல் ஒருபுறமும், பாஜக சார்பில் வானதி சீனிவாசன் என இருவரும் மக்களை கவரும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மேலும் அனைவராலும் பார்க்கப்பட்ட, பேசப்பட்ட நட்சத்திர தொகுதியாகவும் கோவை தெற்கு தொகுதி இருந்து வந்தது. கமலுக்காக அவரது மகள் அக்ஷரா, நடிகை சுஹாசினி உள்ளிட்ட நட்சத்திர பிரபலங்கள் வாக்கு சேகரித்த நிலையில், வானதிக்காக நமீதா உள்ளிட்டோர் களப்பணியில் ஈடுபட்டு மக்களை கவர்ந்தனர்.
வாக்கு எண்ணிக்கை குறித்து சிலர் விமர்சித்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை தெற்கில் சுயேட்சையாக போட்டியிட்ட இந்துஸ்தான் ஜனதா கட்சியின் தென்மண்டல தலைவரான கே.ராகுல்காந்தி வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்தமனுவில், ‛‛தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பல வெளிவந்தாலும் இந்த தொகுதியின் வெற்றி குறித்து கடைசி வரை யாராலும் எதையும் உறுதியாக சொல்ல முடியாமல் இருந்தது என்றும், வானதி வெற்றி பெறுவதற்கான எந்த சூழ்நிலையும் இல்லை,’ என தெரிவித்திருந்தார். ‛இந்த நிலையில் தற்போது 53 ஆயிரத்து 209 வாக்குகள் பெற்று வானதி வெற்றி பெற்றுள்ளது என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மின்னணு வாக்குப்பதிவில் நிச்சயம் முறைகேடுகள் நடந்திருக்கும்,’ என்றும் என தன் மனுவில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனின் வெற்றி செல்லாது என அறிவிக்கவும், மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தவும் உத்தரவிடுமாறும்,’ அந்த மனுவில் ராகுல்காந்தி கூறியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.