திமுக துணைப் பொத்துச்செயலாளார் ஆ.ராசாவுடன் திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். ஒருமணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த ஆலோசனையில் வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை.


சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றபோது மட்டுமே முக ஸ்டாலினோடு இணைந்து  ஆ.ராசா பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அதன்பின் அவரை காண முடியவில்லை. கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கரை சந்தித்ததால் ஆ.ராசா 6 நாள் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில்தான் ஸ்டாலின் நேற்று ஆ.ராசாவை திடீரென சந்தித்தார்.


குறிப்பாக கொரோனா விவகாரங்களில் தமிழக அரசு அதிரடி காட்டி வருகிறது. தடுப்பூசிக்கு உலகளாவிய டெண்டர் விட்டுள்ளது. அதோடு ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை மாநிலங்களிடம் இருந்து வசூலிக்க தற்காலிக தடையும் கேட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசிடம் இருந்து போதுமான நிதி கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 



அதோடு, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அதிமுகவின் கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஏற்கெனவே மற்றொரு அதிமுக உறுப்பினர் உயிரிழந்ததால் 3 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. ஒரு இடத்தை கேட்டுப் பெற காங்கிரஸ் கட்சி போட்டி போடுவதாக தெரிகிறது. குறிப்பாக அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு அந்த பதவி வேண்டும் என ஏற்கெனவே தூது அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.


அதோடு, முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் விரைவில் பிரதமரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். அப்படி சந்திக்கும் போது வேறு யாரை சந்திக்க வேண்டும், மாநில நலன்களில் எத்தகைய அணுகுமுறையை டெல்லியில் கடைபிடிக்க வேண்டும், தமிழகம் சார்ந்த முக்கிய அதிகாரிகளை எப்படி பயன்படுத்திக் கொள்வது உள்ளிட்டவை எல்லாம் குறித்து முக ஸ்டாலினும் ஆராசாவும் தங்களது சந்திப்பில் பேசியிருக்கலாம் என தெரிகிறது.