Rahul Gandhi On Agni Veer: அக்னிவீர் திட்டம் தொடர்பாக பொய் சொன்ன ராஜ்நாத் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என,  எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.


ராகுல் காந்தி குற்றச்சாட்டு:


அக்னிவீர் திட்டம் தொடர்பாக மோடி தலைமயிலான மத்திய அரசிடம், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றன. மக்களவையில் திங்கட்ழமையும் (ஜூலை 1) இது தொடர்பாக பலத்த விவாதம் நடந்தது. அக்னிவீர் திட்டம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், சிவபெருமானின் புகைப்படத்தைக் காட்டி தனது கருத்தை வெளிப்படுத்தினார்.  அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை எதிர்ப்பும் தெரிவித்தார். இந்நிலையில்,  எதிர்க்கட்சித் தலைவர் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அதே சிவபெருமானின் புகைப்படத்துடன் அக்னிவீர் திட்டம் தொடர்பாக மத்திய அரசை குற்றம் சாட்டி உள்ளார்.


பொய் சொன்ன பாதுகாப்பு அமைச்சர் - ராகுல் காந்தி


அந்த வீடியோவில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையில், சத்தியத்தைப் பாதுகாப்பதே ஒவ்வொரு மதத்தின் அடித்தளம் என்று கூறியிருந்தேன். அதற்குப் பதிலளித்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சிவபெருமானின் புகைப்படத்துக்கு முன்னால் வணக்கம் செலுத்தினார். முழு இந்தியா முன்பு நாட்டின் ராணுவம் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பொய் கூறினார்" என குறிப்பிட்டுள்ளார்.






உயிரிழந்தவருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை - ராகுல் காந்தி:


தொடர்ந்து பேசுகையில், ” அக்னிவீர் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் பணியாற்றி வந்தபோது குண்டு வெடிப்பில் பலியான தியாகி அஜய் சிங்கை குறிப்பிடுகையில், அவரது தந்தையின் பேச்சு தொடர்பான காணொலியை காட்டினார்.  அதில், “தியாகிகளின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளித்ததாக ராஜ்நாத் சிங் அறிக்கை அளித்தார். எங்களுக்கு எந்தப் பணமும் வரவில்லை” என அஜய் சிங்கின் தந்தை தெரிவித்துள்ளார். இதை குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் சொன்னதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியதோடு, மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


ராணுவம் விளக்கம்:


இதனிடையே ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக வலைதளங்களில் சில பதிவுகள், பணியின் போது உயிரிழந்த அக்னிவீர் அஜய் குமாரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ஏற்கனவே ரூ.98.39 லட்சம் செலுத்தப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


சர்ச்சையாக வெடித்த சிவபெருமான் புகைப்படம்:


எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சபையில் சிவபெருமானின் படத்தைக் காட்டி, சத்தியம், தைரியம் மற்றும் அகிம்சை ஆகியவை சங்கரரால் ஈர்க்கப்பட்டவை என்று கூறினார். “பயப்படாதே, பயப்படவேண்டாம்” என்று சிவபெருமான் சொல்கிறார்” என்று கூறியிருந்த அவர், “இஸ்லாம், சீக்கியம், கிறிஸ்தவம், பௌத்தம் என எல்லா மதங்களும் இதையே வலியுறுத்துகின்றன என குறிப்பிட்டார். அயோத்தியில் பாஜக தோல்வியடைந்ததைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி, பகவான் ஸ்ரீராமர் பாஜகவுக்கு ஒரு செய்தியைக் கொடுத்துள்ளார் என்று கூறினார்.