ஜார்க்கண்ட் முதலமைச்சராக பொறுப்பேற்று 5 மாதங்களே ஆன நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் சம்பாய் சோரன். இதையடுத்து, மீண்டும் முதலமைச்சராக உள்ளார் ஹேமந்த் சோரன்.


ஜார்க்கண்ட் அரசியல் நிலவரம்: கடந்த 2021ஆம் ஆண்டு, ஜார்க்கண்ட் முதலமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன், நிலக்கரி சுரங்கத்தை தனக்கு தானே குத்தகை விட்டதாக அவர் மீது பாஜக புகார் அளித்தது. நிலக்கரி சுரங்கத்தை குத்தகை விட்டதில் மோசடி நடந்தது தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின.


இதையடுத்து, முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் ஹேமந்த் சோரன். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சம்பாய் சோரனுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி, ஹேமந்த் சோரனை ஜாமீனில் விடுவித்தது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்.


ஜாமீனில் வெளியே வந்ததை தொடர்ந்து, ஹேமந்த் சோரன், மீண்டும் முதலமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சம்பாய் சோரன் இன்று அளித்தார்.


மீண்டும் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்: இந்த நிலையில், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார் ஹேமந்த் சோரன். முன்னதாக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சட்டப்பேரவை குழு தலைவராக ஹேமந்த் சோரனை அக்கட்சி எம்எல்ஏக்கள் நேற்று தேர்வு செய்தனர்.


இந்தாண்டின் இறுதியில் ஜார்க்கண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, மாநில முதலமைச்சராக சம்பாய் சோரனே தொடர்வார் என கூறப்பட்டது. தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்ற பிறகே, ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.


அதே சமயத்தில், முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதில் சம்பாய் சோரனுக்கு விருப்பம் இல்லை என தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சம்பாய் சோரன், "தலைமை மாறியதும் எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.


ஹேமந்த் சோரன் திரும்பி வந்த பிறகு, நாங்கள் (கூட்டணி) அவரை எங்கள் தலைவராக தேர்ந்தெடுத்தோம். நான் ராஜினாமா செய்தேன். கூட்டணியில் எடுத்த முடிவைத்தான் பின்பற்றுகிறேன்" என்றார்.


கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, 30 தொகுதிகளையும் காங்கிரஸ், 16 தொகுதிகளையும் ராஷ்டிரிய ஜனதா தளம் 1 தொகுதியையும் கைப்பற்றியது.