தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் காரிமங்கலத்தில் பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம், மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். 

 

அப்பொழுது பேசிய ஆர்.எஸ்.பாரதி, ”கருணாநிதி இருந்த மேடையிலேயே திமுகவை வழிநடத்தக் கூடிய தலைவர் மு க ஸ்டாலின் தான் என பேராசிரியர் அன்பழகன் தெரிவித்தார். அதனால் தான் கருணாநிதி மறைவிற்கு பிறகு ஸ்டாலின் தலைவர் ஆனார். அதனால் தான் கட்சி இன்று வரை நன்றாக இருக்கிறது.  அவர் வந்த பிறகு நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வெற்றி, சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

 

இன்று திமுகவை பார்த்து வாரிசு அரசியல் என எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். எம்ஜிஆருக்கு பிறகு யார் முதலமைச்சர் ஆனார்கள் ஜானகி. ஜானகிக்கு பிறகு ஜெயலலிதா. இதில் ஜெயலலிதாவிற்கும் எம்ஜிஆருக்கும் என்ன உறவு என்பது அவர்களே முடிவு பண்ணட்டும். ஜெயலலிதாவிற்கு பிறகு சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க வந்தார். ஆனால் பாஜகவின் சூழ்ச்சியால் சசிகலா முதலமைச்சராக முடியவில்லை. சட்டமன்றத்தில் அதிக பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒருமனதாக சசிகலாவை தேர்ந்தெடுத்தனர். ஆனால் பாஜக சசிகலாவை முதலமைச்சராக விடாமல், ஆளுநர் தமிழகத்திற்கே வரவில்லை. அன்று சட்டத்திற்கு புறம்பாக ஆளுநர் செயல்பட்டதால், சசிகலாவால் முதலமைச்சராக முடியவில்லை. சசிகலாவை சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்த பொழுது அவர் குற்றவாளி அல்ல. ஆனால் சட்டமன்ற குழு தலைவராக கடிதம் கொடுத்து, ஒரு வார காலத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி என தீர்ப்பு வந்தது.



 

இந்த நிலையில் திமுக வை பார்த்து வாரிசு அரசியல் என பேசுகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் சென்று பிரச்சாரம் செய்தவர். திமுகவில் உதயநிதி ஸ்டாலின் கால் வைத்தவுடன், அனைத்து தேர்தல்களிலும் வெற்றி மேல், வெற்றி தான் திமுகவிற்கு கிடைத்தது. கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒரே ஒரு செங்கல்லை வைத்து, அதிமுக ஆட்சியை கவிழ்த்து, திமுக ஆட்சியை பிடிக்க வைத்தவர் உதயநிதி ஸ்டாலின். எனது அதிர்ஷ்டம் நான் யார் மீது வழக்கு தொடுத்தாலும், அவர்கள் வசமாகி மாட்டிக் கொள்கிறார்கள். அப்படித்தான் ஜெயலலிதாவும். இப்ப எடப்பாடியும் மாட்டியுள்ளார். மூன்று மணிகளும் ( வேலுமணி, தங்கமணி, வீரமணி) இருக்கிறார்கள். தை மாதத்திற்கு தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழும்” எனப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஆ.மணி, கிருஷ்ணகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.