சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தி வார விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ”திராவிடநல் திருநாடு” என்ற வார்த்தையை விடுவித்து பாடப்பட்ட விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதில் பங்கேற்ற ஆளுநர் ரவியை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், தமிழ்நாட்டிற்கு ரவிக்கு பதில் புதிய ஆளுநர் நியமிக்கப்படவிருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


5 ஆண்டுகள் முடிந்தும் ஆளுநராக தொடரும் ரவி


ஆளுநர்கள் நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து 5 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம் என அரசியல் சாசனத்தின் `156வது விதி வரையறுத்துள்ளது. இருப்பினும், ஐந்து ஆண்டுகள் முடிந்தவுடனே அவர்களது பதவி காலம் என்பது முடிவடையாது. அடுத்த ஆளுநரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்யும் வரை ஆளுநராக இருப்பவர் பதவியில் தொடரலாம். அதனடிப்படையில், தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவியின் 5 ஆண்டு பதவி காலம் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. ஆனாலும் இதுவரை குடியரசுத் தலைவர் தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநரை அறிவிக்காததால் அவரே ஆளுநராக தொடர்கிறார்.


ஆர்.என்.ரவி கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி தமிழக ஆளுநராக பதவியேற்றார். ஆனால் அவர் 2019ல் குடியரசுத் தலைவரால் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு மேகலாயா மற்று நாகலாந்திலும் பணியாற்றிய காலத்தை கணக்கில்கொண்டால் அவரது பதவி காலம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே முடிவடைந்துவிட்டது.


ஆளுநரை திரும்ப பெறுக – வலுக்கும் குரல்கள்


ஏற்கனவே, தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே அவர் நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து கருத்து மோதல்கள் இருந்து வந்த நிலையில், சமீக காலத்தில் அது குறைந்தது. இந்நிலையில், சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் “திராவிட நல் திருநாடு” என்ற வார்த்தை இன்றி பாடப்பட்டது பெரும் புயலை தமிழ்நாட்டில் கிளப்பியது. தொடர்ந்து ஆளுநந் திராவிடம் குறித்து சர்ச்சையாக பேசி வரும் நிலையில், திட்டமிட்டு இந்த வார்த்தை நீக்கப்பட்டதாக கூறி அவரை தமிழக ஆளுநர் பதவில் இருந்து நீக்க வேண்டும் என்று திக, திமுக உள்ளிட்ட கட்சிகளும் தமிழ்நாடு அரசின் முதல்வரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.


புதிய ஆளுநர் வி.கே.சிங் ?


இப்படியான சூழலில் ஐந்தாண்டுகள் பதவி காலத்தை முடித்த ஆளுநர்களை திரும்ப பெற்றுக்கொண்டு அவர்களுக்கு பதில் புதியவர்களுக்கு ஆளுநர்களாக வாய்ப்பு கொடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு ஆளுநரின் பெயர் இந்த பட்டியலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


ஆர்.என்.ரவிக்கு பதில் புதிய ஆளுநராக வி.கே.சிங் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இவர் இந்திய ராணுவத்தின் முன்னள் தளபதியாக பதிவு வகித்தவர். அதே நேரத்தில் மத்திய பாஜக அரசில் பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் வி.கே.சிங். 2021 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளராக இவரை பாஜக தலைமை அறிவித்தது. இவரது கண்காணிப்பிலேயே கடந்த நாடாளுமன்ர தேர்தலில் பாஜக வேலூர், சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


திமுக ஆட்சி காலம் வரை ரவியே தமிழ்நாட்டின் ஆளுநர் ?


ஆனால், இப்படியான செய்திகள் வெறும் வதந்தி என்றும் ஆர்.என்.ரவியே வரும் 2026ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் ஆளுநராக தொடருவார் என்றும் ராஜ்பவன் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆர்.என்.ரவியை மாற்றுவது தொடர்ந்த எந்த சமிஞ்கையும் ஆளுநர் மாளிகையில் இதுவரை தெரியவில்லை என்றும் தெரிகிறது.