சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக இளைஞரணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "துணை முதலமைச்சராக இருக்கும் நானும் இளைஞர் அணி பொறுப்பில் இருந்து தான் வந்துள்ளேன். ஒரு நாட்டின் முதலமைச்சரையே இளைஞர் அணியில் தான் உருவாக்கி உள்ளது. அதற்கு காரணம் நீங்கள் தான். இளைஞர் அணியில் சிறப்பாக உழைப்பவர்களுக்கு முதல்வர் பொறுப்பு வழங்குவார். யாருக்கு எந்த பொறுப்பை தர வேண்டும் என்று திமுக தலைவருக்கு தெரியும். அதற்கு இதுதான் சிறந்த உதாரணம். சிறப்பாக செயல்படக்கூடிய இளைஞர் அணி என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான். திமுக தலைவருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளேன். இன்னும் 3 மாதத்தில் 234 தொகுதியிலும் 234 கலைஞர் நூலகமும் தொடங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளதாக கூறினார்.
மழை பெய்து 24 மணி நேரத்தில் மழை பெய்ததற்கான சுவடு இல்லாமல் ஆக்கியது திமுக ஆட்சிதான். மழை பொழிய துவங்கியவுடன் களத்தில் நான் இறங்கி சென்றவுடன் தான் அனைத்து பணிகளும் நடைபெற்றது. அவ்வாறு அரசு அதிகாரிகள் பழகிவிட்டனர். அதற்கு கடந்த 10 ஆண்டுகால ஆட்சி தான் காரணம். சென்னையில் முதல்வர் உத்தரவின்படி மழை பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் சிரமப்படக்கூடாது என்று என்னை அழைத்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்" என்று கூறினார்.
மேலும், ஒன்றிய, நகர, பகுதி பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமனம் விரைவில் நடைபெற உள்ளது. இல்லம் தோறும் இளைஞர் அணி பணியை மிக சிறப்பாக செயல்பட்டு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் சிறப்பான இளைஞர்களை, இளைஞர் அணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே தான் நோக்கம். தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று இளைஞர்களிடம் வலியுறுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்பட வேண்டும். அதற்காக சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இது வடகிழக்கு பருவமழை காலம் இன்னும் இரண்டு மாத காலம் இருக்கிறது.
இளைஞர் அணியினர் மக்களுக்கு தேவையான பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். அதிமுக ஆளும் கட்சியாக இருந்த காலத்தில் கூட அவர்கள் களத்தில் இறங்கவில்லை. அப்பொழுது முதல் முதலாக திமுக இளைஞரணி தான் இறங்கி மக்கள் பணியாற்றியது. எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி ஆளும் கட்சியாக இருந்தபோதும் சரி மக்களுடன் நிற்கின்ற ஒரு கட்சி தான் திமுக. அரசுக்கும், மக்களுக்கும் இடையே திமுக இளைஞரணி பாலமாக என்று செயல்பட வேண்டும் என்று கூறினார்.
மழைக்காலத்தில் எதிர்க்கட்சி காரர்களை ஒருவரை கூட களத்தில் பார்க்க முடியாது. இதனால்தான் மக்களுடன் மக்களாக திமுக நின்று கொண்டிருக்கிறது என்று நாம் சொல்வோம். திமுக இளைஞரணி கொடுத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றிவிட முடியாது. அதில் நிறைவேற்ற முடிந்ததை மட்டும் தான் பண்ண முடியும். அதேபோன்று மக்கள் சொல்லும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற முடிந்தாலும்? முடியாவிட்டாலும்? மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்டாலே மகிழ்ச்சி ஏற்படுத்தி விடும்.
அதனால் தான் மக்களுடன் நாம் நிற்கவேண்டும். திமுக நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு பொறுப்பு உயர்வு எதிர்பார்க்கும் நிலையில் நிச்சயம் நிறைவேறும். வருகின்ற சட்டமன்றத் தேர்தல் மிகமுக்கியமான தேர்தல். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் அரை இறுதி போட்டி தான். அடுத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தல் உண்மையான இறுதிப் போட்டி. இந்த இறுதிப்போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆகவேண்டும். அதற்கான உழைப்பு வெற்றி உங்கள் கையில் உள்ளது.
234 தொகுதியில் குறைந்தது 200 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணியை இப்பொழுது இருந்தே துவங்கிவிட்டோம். மூத்த நிர்வாகிகளுடன் சேர்ந்து சட்டமன்ற தேர்தலுக்கான பணியை இப்பொழுது இருந்து துவங்குங்கள் என்று அறிவுரை வழங்கினார்.