புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் உப்பளம் தலைமைக் கழகத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :


கடந்த திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஐந்தாண்டு காலம் முதலமைச்சராக இருந்த நாராயணசாமி அவர்கள் ஒருமுறை கூட முழுமையான பட்ஜெட் போடாமல் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் தனது காலத்தை கடந்து சென்றார். நாராயணசாமி தலைமையிலான அரசு என்பது புதுச்சேரி மாநிலத்தின் ஒரு இருண்ட ஆட்சியாகும், 5 ஆண்டு காலத்தில் நூறு ரூபாய் அளவில் கூட எந்த ஒரு திட்டத்திலும் மக்கள் பயன்பெறவில்லை. தேர்தலில் போட்டியிடாமல் பதுங்கிக் கொண்டவர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி. அப்படிப்பட்ட நபர் சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டு இந்த பட்ஜெட்டில் வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு திட்டங்களை அறிவித்த எங்கள் கூட்டணியின் முதலமைச்சரை பற்றி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதும் பொய்யான பல கருத்துக்களை எடுத்துக் கூறுவதும் தகுதியற்ற செயலாகும்.


மொத்த பட்ஜெட்டில் 11,600 கோடியில் 9000 கோடி அரசு ஊழியர் சம்பளம், அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் தொகை, முதியோர் விதவை பென்ஷன், கடன் மற்றும் வட்டி, மின்சாரம் வாங்குதல் என புள்ளி விபரங்களை அடுக்கி உள்ளார்.  ஐந்து ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்த ஊருக்கு மின்சாரம் கொள்முதல் செய்வது என்பது செலவினத்தொகை அல்ல. இந்த ஆண்டு மின்சாரம் வாங்குவதற்கு 1690 கோடி ரூபாய் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் மின்விநியோகம் செய்வதில் நமக்கு 1800 கோடி ரூபாய்க்கு மேல் மின் கட்டண வருவாய் வரும் என்பதை கூட மறந்துவிட்டு சிறுபிள்ளைத்தனமாக அறிக்கை வெளியிடுகிறார்.


கடந்த ஆண்டு பட்ஜெட்டில் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி, முதியோர் உதவிக்கு 500 ரூபாய் அதிக நிதி உதவி, தனியார் பள்ளியில் கல்வி பயிலும் அட்டவணை இன மாணவர்களுக்கு கல்வி கட்டணம்,உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி கட்டணங்கள், 3500 சம்பளத்தில் வேலை செய்த பத்தாயிரத்துக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு, இலவச அரிசி அதற்கான தங்கு தடை இன்றி மாதம் பணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தடையின்றி செயல்படுத்தி வரும் எங்கள் முதலமைச்சரை தரம் தாழ்ந்து அடிமை ஆட்சி அடிமை முதல்வர் டம்மி முதல்வர் என நாராயணசாமி பேசுவது அருவருக்கு தக்க ஒன்றாகும்.


தற்போது கூட பட்ஜெட்டில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத விதத்தில் சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியம், பெண் குழந்தைகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் டெபாசிட்,விதவை நிதி உதவி 2500 ல் இருந்து 500 ரூபாய் உயர்த்தி 3000, மீனவர்களுக்கு 500 ரூபாய் உயர்த்தி மாதாந்திர நிதி உதவித்தொகை, பெண்களுக்கு நகரப் பகுதியில் இலவச பஸ் போக்குவரத்து என பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். இந்த திட்டங்களை குறிப்பிட்டு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இந்த திட்டங்களை செயல்படுத்த பணம் எங்கிருந்து வரும் என ஒரு சிறு பிள்ளைத்தனமான கேள்வியை கேட்கின்றார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய நலத்திட்ட உதவிகள் என்பது சுமார் 300 கோடி ரூபாய் அளவில் தான் வரும். 300 கோடி என்பது மொத்த பட்ஜெட்டில் மூன்று சதவீதம் தான், மொத்த பட்ஜெட்டில் எப்பொழுதும் 100 சதவீதத்தை எந்த அரசாலும் செலவு செய்ய முடியாது.


பல துறைகளில் ஐந்து சதவீதம் பத்து சதவீதம் குறைவாக செலவு செய்யக்கூடிய பணத்தை திருத்தி அமைக்கப்பட்ட பட்ஜெட்டில் மூலம் இந்த திட்டங்களை நிறைவேற்ற முடியும். அப்படியே இல்லை என்றாலும் கலால் துறையில் சாதாரண வரி விதிப்பின் மூலம் இந்த திட்டங்களை செயல்படுத்த முடியும். அறிவிக்கப்பட்ட நல்ல திட்டங்களை பாராட்டு மனம் இல்லாமல் மக்களிடம் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பொய்யான தகவலை எடுத்துக் கூறி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.


 ஐந்தாண்டு காலம் முதலமைச்சராக இருந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சட்டமன்றத் தேர்தல் என ஒரு போர் வரும் பொழுது முன்னின்று தளபதியாக சண்டை போட வேண்டியவர் தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகுட்டு ஓடி காங்கிரஸ் கட்சியை புதுச்சேரியில் காணாமல் செய்துவிட்டார். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு காங்கிரஸ் கட்சியின் மீது உண்மையில் அக்கறை இருக்குமேயானால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் நாராயணசாமி போட்டியிட தயாரா ? அப்படி அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது.


தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும், ஆர் எஸ் பாரதி அவர்களும் திமுகவினர் பேனர் வைத்தால் ஒரு நடவடிக்கை எடுப்பேன் என்கின்றனர். அவர்கள் இருவரின் வழியில் புதுச்சேரி திமுக அமைப்பாளர் சிவா அவர்களும் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுப்போம் என வீர வசனம் பேசி உள்ளார். கடந்த 10 தினங்களாக புதுச்சேரி நகரப் பகுதி முழுவதும் ஒன்று இரண்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பிறந்தநாள் பேனர்கள் மக்கள் முகம் சுளிக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளில் வைக்கப்பட்டுள்ளன அவ்வாறு பேனர் வைத்துள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களால் உரிய நடவடிக்கை எடுக்க முடியுமா ? அல்லது திமுக புதுச்சேரி மாநில எதிர்க்கட்சித் தலைவரால் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தலைமை கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியதாக நடவடிக்கை எடுக்க முடியுமா?


சிறு நடவடிக்கை எடுத்தால் கூட எதிர்க்கட்சித் தலைவர் பதவி உடனடியாக பறிப்பு விடும் என்பதை மனதில் கொண்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கட்டுப்பாடு செயல்களை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் வேடிக்கை பார்க்கிறார். எப்பொழுதுமே திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இரட்டை வேடம் போடுவதில் வல்லவர்கள். இந்த பேனர் விஷயத்திலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது. தமிழகத்தில் சட்டமன்ற நடப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்றம் கூடப்படும் சூழ்நிலையில் பெண்களுக்காக ஆயிரம் ரூபாய் நிதி உதவி இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என தமிழக சட்டமன்ற சபாநாயகர் பொது இடத்தில் அறிவித்துள்ளார். இது சட்டமன்ற நடத்து வீதிகளுக்கு புறம்பான ஒன்றாகும். சட்டமன்ற நடத்த விதிகளை பற்றி கவலைப்படாத சபாநாயகரிடம் அதிமுகவின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் சம்பந்தப்பட்ட கோரிக்கையில் நியாயம் கிடைப்பது கஷ்டமான ஒன்றாகும். தமிழக சட்டமன்ற திமுகவைச் சேர்ந்த மாண்புமிகு சபாநாயகர் செயல் என்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும் என  கூறினார்.