நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு, தொண்டர்கள் புடைசூழ பேரணியாக வந்து இன்று ஆஜரானார் ராகுல் காந்தி. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை, கடந்த 2010ம் ஆண்டு ‘யங் இந்தியா’ என்ற நிறுவனம் வாங்கியது. காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள இந்த நிறுவனம், நேஷனல் ஹெரால்டின் பங்குகளை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.


இது தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு குறித்து விசாரிக்க சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் சம்மன் அளித்திருந்தனர். ஜூன் 8ம் தேதி ஆஜராகும்படி சோனியாவுக்கு உத்தரவிட்ட அதிகாரிகள், அதற்கு முன்னர் ஆஜராக வேண்டும் என ராகுலுக்கும் உத்தரவிட்டனர். இந்த நிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று ஆஜரானார். முன்னதாக, காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கு மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அங்கிருந்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பேரணியாக நடந்து வந்தார். அவருடன் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்தனர்.




அப்போது, போலீசார் வைத்திருந்த தடுப்புகளை தாண்டியும், உதைத்தும் அவற்றை கடந்து சென்றனர்ர். சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளையும் மீறி தொண்டர்கள் கோஷமிட்டபடி சென்றனர். டெல்லியில் பல இடங்களில் காங்கிரஸ் சார்பில் சர்ச்சைக்குரிய வகையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், ‛நான் சாவர்க்கர் அல்ல, ராகுல்’, ‛உண்மை வெல்லும்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.


ராகுலுக்கு ‘சம்மன்’ அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்கள் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதற்கு காவல்துறை அனுமதி தரவில்லை என்பதால் தடையை மீறி காங்கிரஸ்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலீசாருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது




இதைதொடர்ந்து, புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி வாக்குவாதம் ஏற்பட்டு காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்ட நிலை நிலவிவருகிறது. இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள்  முதல்வர் நாராயணசாமி, நரேந்திர மோடி அரசு காங்கிரஸ் கட்சியினர் மீது களங்கம் செய்ய வேண்டும் என்பதற்காக இத்தகைய செயலை செய்கிறார். நாங்கள் பல வழக்குகளை பார்த்து இருக்கின்றோம். இதற்கெல்லாம் அஞ்சாது இந்த காங்கிரஸ் என கூறினார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண