செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று, முன்னாள் முதல்வர் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓராண்டு அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.



விழாவில்  நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு  பொதுமக்களிடையே பேசுகையில்,  “விவசாய கடன் தள்ளுபடி செய்தது, கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்தது என்ன மகத்தான சாதனைகளை செய்துள்ளது திமுக அரசு. ஸ்டாலினை விமர்சனம் செய்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஹெச். ராஜா, கலைஞரை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என்று சொல்கிறார்.



 

வைரஸ் தொற்று காலத்தில் ஆட்சி எப்படி நடத்துவது, அதை எப்படி சமாளிப்பது என்று, தெரியாமல் இருந்த காலத்தில் திறம்பட செயல் பட்டவர் முதல்வர் ஸ்டாலின். எப்படியாவது சாதி கலவரத்தை உண்டு பண்ணி இந்த ஆட்சிக்கு கெட்ட பெயரை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் , பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது. சிறு பிரச்னை கூட பூதாகரமாக மாற்றி கொண்டிருக்கிறது பாஜக . அதிக ஆட்கள் எல்லாம் பாரதிய ஜனதா கட்சியில் இல்லை , அதிமுக சற்று கமுக்கமாக இருக்கும் காரணத்தினால், அவர்கள் பெரியதாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் நம்மை ஒன்றும் வென்றுவிட முடியாது. விரைவில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும்” என தெரிவித்தார்.



 

இவ்விழாவை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர செயலாளர் நரேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஏராளமான திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்