காங்கிரஸ் தலைவர் ப்ரியங்கா காந்தி தெற்கு கோவாவில் மோர்பிர்லா கிராமத்தில் பழங்குடிப் பெண்களுடன் பாரம்பரிய நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கோவா சட்டமன்றத் தேர்தல்களை ஒட்டி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கோவாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிவப்பு நிறப் புடவை அணிந்திருந்த ப்ரியங்கா காந்தி, பழங்குடிப் பெண்களுடன் இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. தொடர்ந்து, அப்பகுதியின் பெண்களுடன் கலந்துரையாடினார் ப்ரியங்கா காந்தி. கோவாவில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தை முன்னின்று நடத்தி வரும் ப்ரியங்கா காந்தி, அங்குள்ள பெண்களின் வாக்குகளைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
பிரச்சாரக் கூட்டத்தில் கூடிய மக்களிடம் பேசிய ப்ரியங்கா காந்தி, வரும் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் 30 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்யப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
`இந்த முறை வாக்கு செலுத்துவதற்கு செல்லும் போது, முதலில் உங்களைப் பற்றியும், உங்கள் மாநிலத்தைப் பற்றியும், உங்கள் குடும்பத்தைப் பற்றியும் சிந்தியுங்கள். உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு அளிக்கும் கட்சிக்கு வாக்கு செலுத்துங்கள்’ என்று ப்ரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். மேலும் வளர்ச்சிக்கும், சூழலியல் பாதுகாப்புக்கும் இடையிலான சமநிலை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
`உங்கள் சூழல், கடல், விவசாயம் ஆகியவற்றை நீங்கள் பாதுகாக்க வேண்டும். அதற்காக உங்களுடன் பணியாற்றும் கட்சி எது என்று நீங்கள் சிந்திக்க வேண்டும்’ என்று கூறிய ப்ரியங்கா காந்தி, கோவாவில் தண்ணீர் பஞ்சம், வேலையின்மை முதலான பிரச்னைகள் தீர்க்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.
கோவா தேர்தலில் மற்றொரு முக்கிய போட்டியாளரான ஆம் ஆத்மி கட்சியைக் குறிப்பிடும் வகையில், ப்ரியங்கா காந்தி கோவா மக்களிடம் `வெளியில்’ இருந்து வரும் கட்சிகளிடம் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
`பல கட்சிகள் வெளியில் இருந்து வருவார்கள். தற்போது பல புதிய கட்சிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அவை வளர்ச்சியை மேற்கொண்டிருக்கின்றனவா? நான் டெல்லியைச் சேர்ந்தவள். ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் இருந்து வந்திருக்கிறது. டெல்லியில் மூச்சு கூட விட முடியாத அளவுக்குக் காற்று மாசு ஏற்பட்டிருக்கிறது’ என்றும் ப்ரியங்கா காந்தி கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் கோவா மாநிலப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், கோவா சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் திகம்பர் காமத், கோவா காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிரிஷ் சாடோங்கர், கட்சி செய்தித் தொடர்பாளர் அல்டோன் டி காஸ்டா ஆகியோர் ப்ரியங்கா காந்தியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.