மத்திய அரசுத் தரப்பில் இன்று நாடாளுமன்றத்தில் விவசாயிகளின் போராட்டத்தில் ஒரு விவசாயி கூட காவல்துறையின் நடவடிக்கைகளால் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிதாகக் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு விவசாயச் சங்களின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தச் சட்டங்கள் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டு முழுவதும் டெல்லியின் எல்லைகளில் சம்யுக்தா கிஸான் மோர்ச்சா என்ற அமைப்பு நடத்திய போராட்டம் தற்போது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. போராடிய விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றியதால், இந்தப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. 


மாநிலங்களவைக்கு அளிக்கப்பட்டுள்ள எழுத்துப் பூர்வ பதிலில், மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று பேசிய போது, `விவசாயிகளின் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய நிவாரணம் என்பது அவர்களின் மாநில அரசுகளுடன் அவர்கள் தீர்த்துக் கொள்ள வேண்டிய விவகாரம்’ என்று கூறியுள்ளார். மேலும், விவசாயிகளின் போராட்டத்தின் போது காவல்துறையின் நடவடிக்கைகளால் ஒரு விவசாயியும் உயிரிழக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 



காங்கிரஸ் கட்சியின் தீரஜ் பிரசாத் சாஹூ, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் ஆகியோர் கூட்டாக எழுப்பிய கேள்விக்கு மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தற்போது பதிலளித்துள்ளார். இந்தக் கேள்விகளில் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக மத்திய அரசுத் தரப்பில் நிவாரண உதவி வழங்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. 


காங்கிரஸ் கட்சி உள்பட நாட்டின் பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆண்டு முழுவதும் நடந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் தொடர்பான விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன. 



போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்பதாக மத்திய அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாகக் கடிதம் பெற்ற சம்யுக்தா கிஸான் மோர்ச்சா என்ற விவசாயிகளின் கூட்டுச் சங்கம் சார்பில் வரும் டிசம்பர் 11 அன்று `வெற்றி தினம்’ எனக் கொண்டாடப்படும் எனவும், விவசாயிகள் வீடு திரும்பும் வரை வெற்றி முழக்கங்கள் எழுப்பபப்டும் எனவும் கூறிப்பட்டுள்ளது. சம்யுக்தா கிஸான் மோர்ச்சாவின் கீழ் சுமார் 40 விவசாயச் சங்கங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. 


கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் முதலான மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களைப் பின் வாங்கக் கோரி, டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த நவம்பர் 29 அன்று, மத்திய அரசு இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் பின்வாங்குவதாக அறிவித்தது. மேலும் நாடாளுமன்றத்திலும் சட்டம் கொண்டு வரப்பட்டது.