தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“ இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டுக்கு ஏற்பட்ட இந்த பெரும் சோகத்தை கொண்டாடும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு மாநில முதல்வர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதன்படி, நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், தமிழ்நாடு காஷ்மீர் போல பிரிவினைவாதிகளின் கைகளில் சிக்கிவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில் ட்விட்டரில் பதிவிட்ட அரசியல் விமர்சகர் மாரிதாசை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இது கடும் கண்டனத்திற்குரியது. மாரிதாசை அவசர, அவசரமாக கைது செய்த காவல்துறையினர், முப்படை தலைமைத் தளபதி மரணத்தை கொண்டாடியவர்களையும், நமது ராணுவத்தை அவமதிக்கும் வகையில் பதிவிட்டவர்களையும் கைது செய்யவில்லை. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது மட்டுமில்ல, பிரிவினைவாதம் பேசுபவர்கள் மீது எப்போதுமே தி.மு.க அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. இது பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக தி.மு.க. அரசு செயல்படுகிறது என்ற மாரிதாசின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் செயல்படுகிறது.
தி.மு.க.வின் கொள்கைகளையும், தி.மு.க. அரசின் செயல்பாடுகளையும் மிகக்கடுமையாக விமர்சித்து வருபவர் மாரிதாஸ். இந்த பின்னணியில்தான் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கருத்துச் சுதந்திரம் பற்றி அதிகமாக பேசும் கட்சி தி.மு.க. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு தங்களை ஆதரிப்பவர்களுககு மட்டுமே கருத்துச் சுதந்திரம் உண்டு என்ற வகையில் அவர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. தங்களை எதிர்க்கும் குரலை ஒடுக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கைகளை திமுக அரசு கைவிட வேண்டும். மாரிதாசை உடனே விடுதலை செய்ய வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளர் மாரிதாஸ். இவர் தனது யூ டியூப் சேனலில் தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக கருத்துகளை பதிவிட்டு வந்தார். அவரது வீடியோக்கள் பலவும் தி.மு.க.வையும், தி.மு.க. தலைவர்களையும் அவதூறாக கூறும் வகையில் இருப்பதாக தி.மு.க.வினர் பலரும் அவர் மீத காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் விபத்து தொடர்பாக, டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக கூறி மாரிதாசை நேற்று மதுரையில் போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்