பிரதமர் நரேந்திர மோடிக்கு பொருளாதாரத்தில் ஏபிசி கூட தெரியாது என பாஜக முன்னாள் எம்.பி சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். சர்ச்சைக்களுக்கு பெயர் போன சுப்பிரமணியன் சுவாமி, பாஜகவின் எம்.பியாக இருந்துகொண்டே, அக்கட்சியின் நடவடிக்கைகளையும், எடுக்கும் முடிவுகளையும் விமர்சிக்கத் தயங்காதவர். அவரின் விமர்சனக் கணைகளுக்கு பிரதமர் மோடியும் விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி தொடங்கி, ரிசர்வ் வங்கி ஆளுநர் நியமனம், அரசின் வரிக்குறைப்பு நடவடிக்கைகள் என சுப்பிரமணியன் சுவாமி ஆளும் பாஜக அரசுக்கு கொடுக்காத ஆலோசனைகளே இல்லை; ஆனால் அவரை எல்லாம் ஆளும் பாஜக தலைமை ஒரு பொருட்டாகவே எடுத்து கொண்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில் ட்விட்டரில் சுப்பிரமணியன் சுவாமியை பின் தொடரும் நபர் ஒருவர், பொருளாதார மந்த நிலை குறித்து கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பிரதமர் மோடிக்கு, சுப்பிரமணியன் சுவாமி எழுதிய கடித்தில் பொருளாதாரத்தை மீட்க, நடுத்தர வர்கத்தினருக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும், முதன்மை கடன் விகிதத்தை 85% ஆகவும், இறுதியாக 5% ஆகவும் குறைக்க வேண்டும் என சுவாமி குறிப்பிட்ட கடிதத்தை ட்விட்டரில் பதிவேற்றி இருந்தார்.
அவரின் இந்த இடுகைக்கு பதில் அளித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, சில சமயங்களில் நான் ஏன் மோடியை சந்தித்து பொருளாதாரம் பற்றி பேசவில்லை என கேள்வி எழுப்பப்படுகிறது. 2014ஆம் ஆண்டு முதல் வருடம் மட்டும் இதை செய்தேன். ஆனால் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் அவருக்கு ஏபிசி ஆஃப் எக்கனாமிக்ஸ் கூட தெரியாது. அதனால் கடிதம் எழுத ஆரம்பித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. 2017ஆம் ஆண்டுக்கு பின் நான் பொதுமக்களுக்கு தெரிவிக்க ஆரம்பித்தேன் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.