நாமக்கல்லில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நீட் தேர்வு விவகாரம் குறித்து பேசுகையில், ’’ஆற்காடு வீராசாமி அண்ணன்; இப்போ அண்ணன் இல்லை, இறைவனடி சேர்ந்துவிட்டார்’’. என குறிப்பிட்டு தமிழகத்தில் நடக்கும் மருத்துவ கல்லூரி சேர்க்கை குறித்து விளக்கினார். இதில் முன்னாள் அமைச்சரும் ’’திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவின் உறுப்பினருமான ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்துவிட்டதாக’’ கூறிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வீடியோவை அவரது ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். உயிரோடு இருக்கும் ஆற்காடு வீராசாமி குறித்து அண்ணாமலை தெரிவித்த தவறான கருத்துக்கு பலர் சமூகவலைதளங்களில் அவர் பேசிய வீடியோவை பதிவிட்டு கண்டனம் தெரிவித்தனர்.
அண்ணாமலையின் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனநிலையில், ஆற்காடு வீராசாமியின் மகனும், வடசென்னை தொகுதியின் மக்களவை உறுப்பினருமான கலாநிதி வீராசாமி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளர்.
வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் கண்டனப்பதிவை ரீ ட்வீட் செய்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்னைக்கு தொடக்க புள்ளியாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசிய வீடியோ அமைந்த நிலையில், தனது கருத்துக்கு அண்ணாமலை வருத்தம் தெரிவித்திருப்பது இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.