ஆன்லைன் ரம்மிக்கு எதிராக இரண்டுவாரங்களில் தமிழக அரசு அவசரச்சட்டம் கொண்டுவர உள்ளது.
இணையதளசேவையானது அனைவரது வாழ்விலும் அத்தியாவசிய தேவையாக மாறிப்போன நிலையில், அதில் இருக்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும், அதில் பணத்தை இழந்து தற்கொலையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தடை வேண்டும்
ஆதலால் இதனை தடை செய்ய வேண்டும் என்று பாமக உள்ளிட்ட பல அமைப்புகள் குரல் கொடுத்து வந்தன. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வர ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த நிலையில் தமிழக அரசு இன்னும் இரண்டு வாரத்தில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசரசட்டம் கொண்டு வர உள்ளது.
பாமக நிறுவனர் அறிக்கை
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று முன்பிருந்தே குரல் கொடுத்த வந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அதை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தினார். இந்த நிலையில் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டம் வரவேற்கத்தக்கது என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்
அதில் அவர், “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டிருப்பதும், அக்குழுவின் அறிக்கையை இரு வாரங்களில் பெற்று அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும்.
பா.ம.கதான் காரணம்!
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பா.ம.க. கடந்த 6 ஆண்டுகளாக தீவிரமாக போராடி வருகிறது. கடந்த ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட பா.ம.க தான் காரணம். இப்போதும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவதற்கும் பா.ம.க. தான் காரணம்!
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பாமக அறிவித்த போராட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக தமிழக அரசின் அறிவிப்பு வந்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்திற்கும், ஆக்கப்பூர்வ அரசியலுக்கும் கிடைத்த வெற்றி ஆகும். இதில் பாமக பெருமிதமடைகிறது!
வல்லுனர் குழுவின் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு, இரு வாரங்களில் அறிக்கை பெறப்பட வேண்டும். அதன் பின்னர் எந்த தாமதத்திற்கும் இடம் கொடுக்காமல் உடனடியாக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டு்ம் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.