மற்றக்கட்சிகளுடன் பேசி விட்டு குடியரசுத் தலைவர் வேட்பாளரை அறிவிக்க சோனியாகாந்தி அறிவுறுத்தி உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. 


18ஆம் தேதி வாக்குப்பதிவு 


இதன்படி வரும் ஜூலை 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஜூன் 15ஆம் தேதி தொடங்கி ஜூன் 29ஆம் தேதி முடிவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 30 ஆம் தேதி நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப்பெற ஜூலை 2ஆம் தேதி கடைசிநாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 18ஆம் தேதி பதிவு செய்யப்படும் வாக்குகள் அனைத்தும் ஜூலை 21ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும், புதிய குடியரசுத் தலைவர் வரும் ஜூலை 25ஆம் தேதி பதவி ஏற்பார் எனவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் குடியரசுத் தலைவருக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக மாநிலங்களவை செயலாளர் பிரமோத் சந்திர மோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


தேர்தல் ஆணையம்  வழங்கும் பேனா மூலமே வாக்குப்பதிவு




குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு ஏற்கப்பட வேண்டும் எனில் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் வேட்பாளரை முன்மொழிய வேண்டும். நாடு முழுவதும் 776 எம்.பிக்கள்  மற்றும் 4,809 எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.எல்.சிக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  தேர்தல் ஆணையம் வழங்கும் பேனா மூலம் மட்டுமே வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 



காங்கிரஸ் ஆலோசனை 


இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மற்றக்கட்சித் தலைவர்களுடன் பேசிவிட்டு குடியரசுத் தலைவர் வேட்பாளரை அறிவிக்குமாறு சோனியா காந்தி கேட்டு கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இது தொடர்பாக சரத் பவாரை சந்தித்து பேசிய போது அதற்கு அவர் ஒப்பு கொண்டார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்களுடன் பேசி ஆலோசனை கூட்டத்திற்கான தேதியை நிர்ணயம் செய்ய உள்ளதாகவும் கார்கே தெரிவித்தார்.