குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பிறந்த கிராமம் மீது உலக மக்களின் பார்வை விழுந்துள்ளது. 


இந்திய குடியரசுத்தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வததற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது.  இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 15 ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 29 ஆம் தேதியாகும்.  இதில் எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்டின் முன்னாள் ஆளுநராகப் பணியாற்றிய திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.




ஒடிசா மாநிலம் மயூர்பன்ச் மாவட்டத்தில் உள்ள உபர்பேடா கிராமம் தான் முர்மு பிறந்த பழங்குடியின கிராமமாகும். அவர் தற்போது இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ராய்ரங்க்பூர் நகரில் வசித்து வருகிறார். உபர்பேடாவில் ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் பதசாகி, துங்கிரிசாகி என்ற 2 குக்கிராமங்கள் உள்ளது. இதில் மொத்தம் 3,500 பேர் வசித்து வரும் நிலையில், இரண்டு கிராமத்திலும் முழுமையாக மின்சார வசதி கிடையாது. 


அங்குதான் முர்முவின் உறவினர்கள் வசிக்கின்றனர். அவர் ஒடிசாவின் கவுன்சிலர், எம்.எல்.ஏ., அமைச்சர், ஜார்க்கண்டின் ஆளுநர் ஆகிய பதவிகளை வகித்தாலும் முர்முவின் சொந்த கிராமத்திற்கு அரசு மின்சார வசதியை ஏற்படுத்தி கொடுக்கவே இல்லை. இந்நிலையில் அவர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும்பான்மை இருப்பதால் வெற்றி உறுதியாகியுள்ளது. இதனையைடுத்து  பதசாகி, துங்கிரிசாகி கிராமத்தில் மின்சார வசதியை ஏற்படுத்தி கொடுக்க ஒடிசா அரசு தீவிரம் காட்டி வருகிறது. போர்க்கால அடிப்படையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் முர்முவின் கிராமம் மின்சார ஒளியில் மின்னும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் இந்தியாவில் ஆயிரக்கணக்கான மலைக்கிராமம்,குக்கிராமங்களில் இதுவரை மின்சார வசதி கிடைக்கவேயில்லை. ஒரு தலைவன் உருவானால் மட்டுமே அவர்கள் இருக்கும் பகுதிக்கு அனைத்து வசதிகளும் வரும் என்பதை முர்முவின் வாழ்க்கையும் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண