அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து நடந்த பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் ஒற்றைத் தலைமை வலியுறுத்தி 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆவேசமாக தெரிவித்தனர்.இக்கூட்டத்தில் இருந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறினார். மேலும் அதிமுக ஓபிஎஸ் தரப்பு - இபிஎஸ் தரப்பு என பிரிந்துள்ளதால் மீண்டும் கட்சி பிளவுபடுமோ என்ற அச்சம் தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பாக இருதரப்பும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையில் தான் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்று (ஜூன் 27) காலை 10 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என நேற்று மாலை அறிக்கை ஒன்று வெளியானது. இது ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என ஒருவர் பெயருமே இல்லாமல் கழக தலைமை நிலையச் செயலாளர் என்ற பெயரில் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
மேலும் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது யார், ஏன் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் அறிக்கை வெளியானது என குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மேற்குறிப்பிட்ட ஆலோசனைக் கூட்டத்தின் செய்தியை சுட்டிக்காட்டி ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் இருவரின் ஒப்புதலை பெற்றே எந்தவிதமான கூட்டத்தையும் கூட்ட வேண்டும்.
அந்த வகையில் அனைத்திந்திய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் எந்த வித ஒப்புதலையும் கூட்டத்திற்கு அளிக்கவில்லை. விதியை மீறி கூட்டப்பட்டுள்ள கூட்டம் சட்டத்திற்கு புறம்பானது. இந்த கூட்டத்தில் முடிவுகள் எதுவும் எடுக்கப்பட்டால் அது ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் கீழ் இருக்கும் கழகத்தையும், தொண்டர்களையும் கட்டுப்படுத்தாது என காட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் அதிமுக வட்டாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்