சென்னையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
‘வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை'
“எம்.பிக்களாக ஜெயித்து டெல்லிக்கு சென்ற வருபவர்கள் தமிழ்நாட்டுக்கு என்ன செய்துள்ளார்கள்? தமிழ்நாட்டுக்கு வேண்டிய உரிமையை இரு கழகங்களும் இன்று வரை பெற்றுத் தரவில்லை. ஊழல், கள்ளச்சாராயம் என தமிழ்நாடு போதை தமிழகமாக மாறியுள்ளது. கனிமவளக் கொள்ளை மிக அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. ரெய்டு போகிறார்கள். ஆனால் அதற்கு பின் நடப்பதை மக்களுக்கு புரியவைப்பது கிடையாது.
வெறும் தேர்தலுக்கான ஆட்சியாகவும், அரசியலாகவும் மட்டுமில்லாமல், நம்பி வாக்களித்த மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய அரசாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
விஜய்யின் அரசியல் வருகை
தொடர்ந்து நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பற்றி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், “யார் நினைத்தாலும் விஜயகாந்தைப் போல் வர முடியாது. அறிவுரை வழங்குவதற்கு எல்லாம் இங்கு ஒன்றுமில்லை.
அரசியல் என்பது வேறு, சினிமா என்பது வேறு. விஜய் மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார். பாராட்டுக்குரிய விஷயம். விஜய் அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்பது பற்றி அவர் தான் கூற வேண்டும், தெளிவுபடுத்த வேண்டும். அவர் சொல்வதற்கு முன் அதைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது” என்றார்.
‘விளைவுகள் மோசமாக இருக்கும்’
தொடர்ந்து, “விஜயகாந்த் எப்படி தொடக்க காலத்தில் மாணவர்களுக்கு இலவச கணினிப் பயற்சி உள்ளிட்ட உதவிகளை வழங்கினாரோ, அதேபோல் விஜய் தற்போது வந்து கொண்டிருக்கிறார். அதை எப்படி பார்க்கிறீர்கள்?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பிரேமலதா, “இன்றைக்கு 40 ஆண்டு காலம் தன்னுடைய வாழ்க்கையை ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் கேப்டன் விஜயகாந்த். கேப்டனைப் போல் ஒருவர் பிறந்து வந்தால் தான் உண்டு. இப்படி செய்தால் இப்படி வரும் என எதையுமே எதிர்பார்க்காமல், தன்னால் முடிந்ததை மக்களுக்கு செய்த ஒரே தலைவர் கேப்டன் தான். அதனால் கேப்டனை மாதிரி நாம் என நினைத்தால் அதனுடைய விளைவு மிக மோசமாகதான் இருக்கும். ஏனென்றால் கேப்டன் இன்று எல்லா விஷயங்களிலும் ஒரு முன்னுதாரணம்.
‘கேப்டன் வாழ்வு சரித்திரம்’
பிறந்தநாள் விழா, கல்வி உதவி, அன்னதானம் எப்படி செய்வது, வேலைவாய்ப்பு, லஞ்ச ஊழல் இல்லாத ஆட்சி எப்படி கொண்டு வருவது என தன்னுடைய வாழ்க்கையை ஒரு வரலாறாக படைத்தவர் விஜயகாந்த்.
அதனால், இன்று கேப்டனைப் பார்த்து அவரைப் போல் மக்களுக்கு நல்லது செய்தால் நல்ல விஷயம், அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் கேப்டனைப் போல் வர முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இது சாதாரண வரலாறு அல்ல. 40 ஆண்டு கால கேப்டன் வாழ்வு ஒரு சரித்திரம். அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்” எனப் பேசியுள்ளார்.