மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தாமிரபரணி நதியில் உயிர் நீத்த நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி நதியில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து விசிக தலைவர் தொல்திருமாவளவன் உயிர் நீத்த தொழிலாளர்களுக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது, "தமிழகம் முழுவதும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை இன்னும் கேள்வி குறியாக தான் உள்ளது. அரசு குறைந்தபட்ச ஊதியமாக 425 ரூபாயை நிர்ணயம் செய்து அறிக்கை வெளியிட்ட நிலையிலும், தேயிலை தோட்ட உரிமையாளர்கள் அதற்கு தடை ஆணை பெற்றுள்ளனர். இந்த வழக்கை தமிழக அரசு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை வெறியாட்டத்தை மத்திய, மாநில பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.


குக்கி உள்ளிட்ட பழங்குடியினர் மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம். இந்த விவகாரத்திற்கு பிரதமரும், உள்துறை அமைச்சரும் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று விசிக வலியுறுத்துகிறது. உலக அளவில் இந்தியா வெட்கி தலைகுனிந்து நிற்கும் அவலநிலையை மணிப்பூர் வன்முறையால் வெறியாட்டம் உருவாக்கியிருக்கிறது. பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அதனை படம்பிடித்து சமூக வலைத்தலங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த கொடூரம் நடந்தேறி இரண்டு மாதங்கள் ஆகின்றன. அங்குள்ள பாஜக அரசு இந்த வன்முறை வெறியாட்டங்களுக்கு வெளிப்படியான உடந்தையாக இருந்து செயல்பட்டு வருவது  அதிர்ச்சி அளிக்கிறது. மணிப்பூர் முதலமைச்சர் ப்ரேன் சிங்கை கைது செய்து குற்ற வழக்கில் சேர்க்க வேண்டும் என விசிக வலியுறுத்துகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதே போல மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார் பங்கேற்கிறார். உயர்நீதிமன்ற பதிவாளர் அண்மையில் அனுப்பி இருந்த சுற்றறிக்கை மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. 


நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தியின் மற்றும் திருவள்ளுவர் உருவப்படம் அல்லது சிலை தவிர வேறு படங்கள் சிலைகளுக்கு அனுமதி கிடையாது என அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கு அல்லும் பகலும் பாராமல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தவர் என்பதில் புரட்சியாளர் அம்பேத்கர் முதன்மையாக இருக்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தவர் என்ற முறையில் நீதிமன்றங்களில் அவரது திருவுருவப்படம் இருப்பது என்பது சாலவும் பொருத்தமானது. வேண்டுமென்றே அவரது படத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு உயர் நீதிமன்றம் இந்த சுற்றறிக்கை அனுப்பியுள்ளது கண்டனத்திற்குரியது. இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் விரைவில் போராட்டம் நடத்த இருக்கிறோம். தமிழகத்தில் சமூகப்பதட்டம், அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் உள்நோக்கத்தில் என்.ஐ.ஏ சோதனை என்ற முறையை பாஜக கையாண்டு வருகிறது. நெல்லையில் எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக் இல்லத்தில் என்ஐஏ சோதனையை நடத்தி அரசியல் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளனர். அந்த கட்சியை கலங்கப்படுத்துவதற்கு அல்லது தமிழ்நாட்டில் சமூகப்பதட்டத்தை ஏற்படுத்துவதற்கு அல்லது  அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு உள்நோக்கத்தோடு இப்படிப்பட்ட பரிசோதனைகள் என்ற பெயரால் புலனாய்வுத்துறையை ஏவுவதை பாஜக அரசு ஒரு உத்தியாக கையாளுகிறது. இது மிகுந்த கவலையை அளிக்கிறது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, என்ஐஏ போன்றவற்றை ஏவுவது. 


என்ஐஏ அமைப்பை ஏவி சோதனை என்ற பெயரால் பதட்டத்தை ஏற்படுத்துவதால் தமிழகம் தீவிரவாத பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர்களை கொண்ட ஒரு மாநிலம் என்று  முத்திரை குத்தும் ஒரு முயற்சியில் பாஜக ஈடுபடுவதாக விசிக கருதுகிறது. அதனை கண்டிக்கிறது. அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பு செய்வதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முனைப்பாக இருக்கிறார். தொடர்ந்து களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.   இந்தியா என்ற கூட்டமைப்பு அமைவதற்கு ஸ்டாலின் மிக முக்கிய காரணம். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் அவருடைய பாத்திரம் மகத்தானது என்பதாலேயே பிரதமர் மோடி கடுமையான ஆத்திரத்தில் இருக்கிறார். மத்திய பிரதேசத்தில் பேசும் பொழுது திமுகவை கண்டித்து பேசுகிறார். அந்தமான் நிகோபாரிலே சில நிகழ்ச்சிகளை ஆன்லைன் மூலம் திறந்து வைத்த போதும் அவருடைய உரையில் திமுகவை சுட்டிக்காட்டி கண்டித்து இருக்கிறார், பாஜக திமுக அரசை கண்டித்து நடத்தும் போராட்டம் வேடிக்கையாக உள்ளது. மணிப்பூர் சம்பவத்தை திசை திருப்பும் நோக்கிலும், இந்தியா கூட்டணி வலுப்பெற்றிடக்கூடாது என்ற பதட்டத்திலும் பாஜக போராட்டம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண