சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரியநாச்சியூர் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிக் கொடி ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகியின் ஆண் குழந்தைக்கு ராஜேஷ் என்ற பெயரை சுட்டினார். பின்னர் நிகழ்ச்சிகள் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்கள் பட்டப்படிப்பு படிப்பதற்கு உதவியாக இருந்த அரசு அதிமுக அரசு தான். அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்த உடன் முடக்கப்பட்ட 100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தி மக்கள் பயன்பாட்டில் கொண்டுவரப்படும் என்று உறுதி அளித்தார். தமிழகம் முழுவதும் நகரப் பகுதிகளுக்கு அருகாமையிலேயே புறவழிச்சாலை அதிமுக ஆட்சியில் தான் அமைத்துக் கொடுக்கப்பட்டது. பல இடங்களில் முதியோர் உதவி தொகை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கிறார்கள். தடையின்றி அதிமுக ஆட்சியில் முதியோர் உதவி தொகை வழங்கப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்போது, தகுதியான முதியோர்கள் அனைவருக்கும் மீண்டும் வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் ஏழைகளுக்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தோமோ அதை எல்லாம் திமுக முடக்கி, கைவிட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் கட்டுமானப் பொருட்களின் விலை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம், ஆனால் திமுக ஆட்சியில் 100 சதவீதம் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. ஏழை மக்கள் வீடு கட்டவேண்டும் என்பது கனவில் மட்டும் தான் நடக்கும், எட்டக்கனியாக மாறிவிட்டது.



திமுக தேர்தல் அறிக்கையில் கட்டுமான பொருட்களின் விலை உயரும்போது, அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்த்து கட்டுப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கட்டுமானபொருட்களின் விலை உயர்ந்து விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. இதனால் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களின் வாக்கை பெற்றுக்கொண்டு, ஆட்சிக்கு வந்தவுடன் மக்களை மறந்துவிடுவது, திமுகவினர் மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் தேர்தல் வரும்போது சிறப்பாக பேசுவார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து குடும்ப தலைவலிக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று இன்றைய முதலமைச்சர், அன்றைய எதிர்கட்சி தலைவராக இருந்தபோது தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது தகுதியானவர்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்கள். தகுதியானவர்கள் என்றால் யார்? பெறமுடியாத அளவிற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதியோர் உதவிதொகை பெறுபவர்கள் குடும்பத்தில், மகளிர் உதவி தொகை கிடையாது. ஆண்டு வருமானம் கணக்கிட்டு கூடுதலாக இருந்தால் உரிமை தொகை கிடையாது என்று பல நிபந்தனைகள் விதித்துள்ளனர். ஆனால் தேர்தல் நேரத்தில் எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை ஆனால் ஆட்சிக்கு வந்துடன் அப்படியே அந்த பல்டி அடித்துவிட்டார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி வந்ததற்கு முன் ஒருபேச்சு, ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு பேச்சு இரட்டை வேடம் போடுகிறார்” என்று விமர்சனம் செய்தார்.



தொடர்ந்து பேசியவர், “தமிழகத்தில் விண்ணைமுட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்துவிட்டது. தக்காளிக்கு பதிலாக ஆப்பிள் வாங்கி சாப்பிட்டு கொள்ளலாம், ஆப்பிள் விலைக்கு தக்காளி சென்றுவிட்டது. தக்காளி கிலோ கணக்கில் இனிவாங்க முடியாது, எண்ணிக்கை அடிப்படையில் தான் தக்காளியை வாங்கமுடியும் நிலை வந்துள்ளது. அனைத்து பொருட்களின் விலை 50 சதவீதம் உயர்ந்துவிட்டது. ஆனால் மக்களின் வருமானம் அதே அளவில் தான் உள்ளது. ஆனால் மக்களைப் பற்றி முதல்வருக்கு கவலையில்லை, குடும்பம் மட்டும்தான் முக்கியம். குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டும்தான் நன்றாக வாழவேண்டும், தனக்குப்பின் தனது மகன் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறாரே தவிர, மக்களின் துன்பங்கள், துயரங்கள் பற்றி முதல்வருக்கு எந்த கவலையும் இல்லை என்றும் விமர்சனம் செய்தார். எனவே அதிமுக மக்களுக்கான போராடுகின்ற, பாடுபடுகின்ற அரசாக இருந்தது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. அதிமுக கூட்டணிகட்சி சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளரை ஆதரித்து வெற்றிபெற செய்ய வேண்டும், மத்தியில் நமக்கு கிடைக்கின்ற நிதியை பெறவேண்டும் என்பதற்காக நமது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என” கோரிக்கை விடுத்தார்.