ஜன் ஸ்வராஜ் (நல்லாட்சி) என்ற பெயரில் புதிய இயக்கம் தொடங்கப் போவதாகவும், பிஹாரில் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் செய்து பொதுமக்களை சந்திக்க உள்ளதாகவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.


இந்திய அரசியல் களத்தில் பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் பற்றித்தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற முக்கிய பங்காற்றியவர் அவர். தேர்தல் உத்தியாளரான பிரஷாந்த் கிஷோருடன் நெருக்கம் காட்டிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அவரை தனது ஐக்கிய ஜனதாதள கட்சியின் தேசிய துணைத் தலைவராக்கினார். பீகாரில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதாதளம் கட்சி கூட்டணி வைத்திருந்தாலும் பல சமயங்களில் அக்கட்சியை விமர்சிக்க பிரசாந்த் கிஷோர் தயங்கியதில்லை. குறிப்பாக, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட விவகாரங்களில் பாஜகவை பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து கடுமையாக விமர்சித்தார்.


இதுபோன்ற பல காரணங்களால் பிரசாந்த் கிஷோர், நிதிஷ்குமார் ஆகியோர் இடையே மனகசப்பு ஏற்பட்ட நிலையில், பிரசாந்த் கிஷோரை கட்சியில் இருந்து நீக்கினார் நிதிஷ்குமார். அந்த சமயத்தில் அமித் ஷா பரிந்துரையின் அடிப்படையிலேயே, பி.கே.,வை ஐக்கிய ஜனதாதள கட்சியில் நிதிஷ்குமார் இணைத்ததாக பரபரப்பாக பேசப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, மேற்குவங்க தேர்தலுக்கு மம்தா பானர்ஜியின் திரிணாமூல், தமிழகத்தில் திமுக ஆகிய கட்சிகளுக்கு பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் பணியாற்றியது. அந்த தேர்தலில் அவர் உத்தி வகுத்து கொடுத்த கட்சிகள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனிடையே, “நான் அரசியல் வியூகப் பணி எனும் இந்த தளத்தில் இருந்து விலகப் போகிறேன். ஐபேக் நிறுவனத்தை அதில் இருக்கும் தலைவர்கள் இனிமேல் நடத்துவார்கள். எனது குடும்பத்தினருடன் நான் நேரத்தை செலவிட விடும்புகிறேன்” என்று பிரஷாந்த் கிஷோர் அதிர்ச்சியளித்தார்.



ஆனாலும், பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் அடங்கிய மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வந்தார். இதற்காக பல்வேறு மாநில அரசியல் கட்சித் தலைவர்களையும், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரையும் அவர் சந்தித்து பேசினார். எதிர்க்கட்சிகளை ஒருகுடையின் கீழ் இணைத்து 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த பிரஷாந்த் கிஷோரால் மட்டுமே முடியும் என்று அரசியல் நோக்கர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அதேசமயம், 2024 தேர்தலுக்காக அவர் காங்கிரஸ் கட்சியுடன் அவர் ஒப்பந்தம் போடவுள்ளார் எனவும், அக்கட்சியில் அவர் சேர உள்ளார் என்றும் கடந்த ஆண்டு தகவல் ஒன்று பரவியது. ஆனால், தேர்தல் உத்தியாளரை பற்றிய அந்த தகவல்கள் வெறும் ஊகங்களாகவே மாறிப்போயின.


இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், கலந்து கொண்ட தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு காங்கிரஸ் கட்சிக்கான ஒரு செயல்திட்டத்தை பற்றி விளக்கினார். இதையடுத்து, பிரஷாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர சோனியா அழைப்பு விடுத்ததாகவும், விரைவில் அவர் காங்கிரஸில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலரது பேச்சுகளும் இதனை உறுதி செய்யும் வகையில் இருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் சேர தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்து விட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.


இதனை உறுதி செய்த பிரஷாந்த் கிஷோர், “அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவின் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியில் சேரவும் மற்றும் தேர்தலுக்கு பொறுப்பேற்கவும் அக்கட்சியின் வாய்ப்பை நான் நிராகரித்து விட்டேன். எனது தாழ்மையான கருத்துப்படி, காங்கிரஸ் கட்சியில் ஆழமாக வேரூன்றியிருக்கும் கட்டமைப்பு பிரச்சினைகளை சீர்திருத்தங்கள் மூலம் சரி செய்ய வேண்டும். அதற்கு என்னை விட அக்கட்சிக்கு தலைமையும், கூட்டு விருப்பமுமே முக்கியம்.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். காங்கிரஸில் சேரும் அவரது திட்டம் தோல்வியடைந்த நிலையில் பிஹாரை மையமாக கொண்டு புதிய கட்சி ஒன்றை தொடங்கப்போவதாக மறைமுகமாக கருத்து தெரிவித்து பிரசாந்த் கிஷோர் ட்வீட் தெரிவித்து இருந்தார்.இதற்கான அறிவிப்பு இன்று (மே 5) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களிடம் பேசினார்.



நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த பிரஷாந்த் கிஷோர், அவர்களின் கூட்டு ஆட்சியினால்தான் பீகார் இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றாக உள்ளது என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "சமூக நீதி மற்றும் வளர்ச்சியின் அடையாளமாக இரு கட்சிகளும் தங்களை கூறிவந்தாலும், யதார்த்தம் இதுதான். எனவே, பிஹார் மக்கள் புதிய எண்ணத்தையும், புதிய முயற்சியையும் செய்ய வேண்டும். இல்லையெனில் மாநிலம் வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியாது. எனவே பீகார் மக்களை சந்தித்து அவர்களின் எண்ணங்களை கேட்டறிய உள்ளேன். நான் கட்சி தொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியிடப் போவதில்லை. ஜன் ஸ்வராஜ் (நல்லாட்சி) இது தான் எங்கள் இலக்கு. இதனையே முன்னெடுக்கப்போகிறோம். பிஹாரில் அடுத்த மூன்று அல்லது நான்கு மாதத்தில் மேலும், 17 ஆயிரம் மக்களை சந்தித்து மக்கள் நல்லாட்சி திட்டம் குறித்து பேசவுள்ளேன். கடந்த 3 நாட்களில் நான் ஏற்கனவே 150 பேரை சந்தித்துள்ளேன். வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த, வெவ்வேறு பிரிவினரை சேந்தவர்கள் என்னை சந்தித்துள்ளனர். எனது முதல் அறிவிப்பு என்னவென்றால், அடுத்த சில நாட்களில் நான் இந்த மக்களை சந்தித்து, பீகாரின் வளர்ச்சிக்கான அவர்களின் யோசனைகளை அறிந்து கொள்ளவுள்ளேன்," என்று கூறிய அவர், மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி முதல் மேற்கு சம்பாரனில் உள்ள மகாத்மா காந்தியின் பிதிஹர்வா ஆசிரமத்தில் இருந்து 3,000 கிமீ பாதயாத்திரை செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், "பிஹாரில் தற்போதைக்கு தேர்தல் ஏதும் இல்லை. தேர்தல் தான் எனது நோக்கம் என்றால் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஆறு மாதம் முன்னர் கட்சி தொடங்கி போட்டியிட்டிருக்கலாம். தேர்தல் என் நோக்கம் அல்ல." என்று கூறினார்.