தேசத்துரோக சட்டத்திற்கு எதிரான வழக்கில் மே-9ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


தேசத்துரோக சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மே-9ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலனித்துவ ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட தேச துரோக வழக்கிற்கு எதிராக இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட ஐந்து பேர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது.


தேசத்துரோக சட்டத்திற்கு எதிராக வழக்கு: மனுதாரர்கள் தரப்பு


கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் கலவரமாக மாறியது. அந்த தருணத்தில் விவசாயிகள் போராட்டம் வன்முறைச் சம்பவமாக மாறியது குறித்து மூத்த பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய், மிருணாள் பாண்டே ஆகியோர் கருத்து தெரிவித்து இருந்தனர். அதனால் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதனைக் கண்டித்து தேச துரோக வழக்கிற்கு எதிராக இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ்  எம்.பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோர்  சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அவர்களின் மனுவில் பத்திரிகையாளர்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் முதல் தகவல் அறிக்கை உள்ளது என்றும் பல்வேறு காலங்களில் தேச துரோக சட்டத்தை அரசாங்கம் தவறாக பயன்படுத்தி வந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க நீதிமன்றத்திற்கு வந்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு தரப்பு


மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்டார்.மேலும் இவ்வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்றும் மத்திய அரசு தரப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.


பதிலளிக்க உத்தரவு


        இவ்வழக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, இவ்வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படுவது குறித்து ஆராயப்படும் என தெரிவித்தது. இதையடுத்து வரும் சனி கிழமைக்குள் மனுதார்ர்கள் தரப்பு பதிலளிக்கவும், வரும் திங்கள் கிழமைக்குள் மத்திய அரசு தரப்பு  பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 10 ஆம் தேதிக்கு(வரும் செவ்வாய் கிழமை) ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.