முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த காலகட்டத்தில் பல்வேறு சமுதாய பணிகளை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் திடீரென அரசியலில் குதித்தார். ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இணைந்த சில நாட்களிலேயே அவருக்கு பாஜக மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக களம் கண்டார்.
தேர்தல் பிரசாரத்தின் போது திமுக கரூர் சட்டமன்ற வேட்பாளரை எச்சரிக்கை விடும் தோணியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் அரவக்குறிச்சி தொகுதியில் தோல்வியுற்ற நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் டெல்லி பாஜக தலைமை தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை செயல்படுவார் என அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதற்கு முன் தினம் மத்திய அரசின் இலாகா விரிவாக்கம் செய்யப்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த பாஜக கட்சியின் முன்னாள் தலைவர் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கிய நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலத் தலைவர் பதவியை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு வழங்கினர்.
புதிதாக பொறுப்பேற்ற அண்ணாமலைக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். பாஜக தொண்டர்கள், வெடி வெடித்தும், சுவரொட்டி ஒட்டியும் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலைய்ல் இன்று காலை கரூர் மாவட்டத்தில் மாவட்ட இளைஞரணி சார்பாக கரூர் நகரின் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், கோவை ரோடு, ஜவகர் பஜார், பழைய பைபாஸ் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வாழ்த்தும் விதமாக இன்றைய தமிழகத்தின் தலைவரே "நாளைய முதல்வரே" என்ற வாசகத்துடன் சுவரொட்டிகள் ஆயிரக்கணக்கில் ஒட்டப்பட்டுள்ளது. "நாளைய முதல்வரே" என்ற வாசகத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள விவகாரம் கரூரில் கவனம் பெற்றது
முன்னதாக பாஜக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கரூரில் நடு ரோட்டில் வெடி வெடித்ததை அவ்வழியாக சென்ற மாவட்ட ஆட்சியர் பார்த்து கோபமடைந்தார். வெடி வெடித்தவர்களை உடனடியாக கைது செய்யும்படியும் அங்கிருந்த போலீசாரிடம் தெரிவித்தார். உடனே அங்கு பணியில் இருந்த போலீசார் நிகழ்வு குறித்து விளக்கினார். அப்போது பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரையும் வேனில் ஏற்ற முயற்சி மேற்கொண்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் செய்த பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு நேற்று பரபரப்பு ஏற்பட்டது.